Close
ஜனவரி 23, 2025 3:33 மணி

மாமர பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் இயற்கை மருந்து..!

மாமரத்தில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் இயற்கை மருந்து தெளிக்கப்படுகிறது.

தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் நெல், தென்னை, சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கோட்டை வட்டார பகுதிகளான பூலாங்குடியிருப்பு, கற்குடி, புளியரை, வல்லம், செங்கோட்டை, இலஞ்சி, உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளையக்கூடிய சப்போட்டா, அல்போன்சா, நீலம், ஒட்டு மாங்காய் என பல்வேறு ரகங்கள் இங்கு விளைவிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு சீசன் காலங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மாங்காய் மரத்தில் பூக்கும் பூக்களில் ஏற்பட்ட பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.

இதனை சரி செய்ய முன்னாள் வேளாண்மை துறை அதிகாரி ஷேக் முகைதீன் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த வயல் விஞ்ஞானி என்றழைக்கப்படும் காவ்யா குணஸ்ரீ என்ற இளம்பெண் ஆகியோர் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில், இயற்கையான மருந்துகளை நவீன யுக்திகளை பயன்படுத்தி மருந்துகளை தெளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் முதன் முதலாக ட்ரோன் உதவியுடன் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை மாமரத்திற்கு தெளிப்பது குறித்த கருத்தரங்கம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஆடாதொடை, புங்கன், நொச்சி வேம்பு, மெக்சிகன் சூரியகாந்தி போன்ற இலைகளின் கனரசல்களை பயன்படுத்தியும், இஞ்சி, பூடு, மிளகாய் போன்றவற்றின் கரைசல்களை பயன்படுத்தியும் மாமரத்தில் பூப்பிடிக்கும் சமயத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த போது கடந்த ஆண்டு மாங்காய் சாகுபடியில் அதிக அளவில் நஷ்டம் அடைந்த நிலையில் வேலையாட்களை கொண்டு மருந்து தெளிப்பதால், உரச்செலவு, கூலி என நஷ்டம் அடைந்தோம். தற்போது இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் பூச்சி தாக்கம் குறைந்து மரத்தில் காய் எண்ணிக்கை அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top