முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சஸ்பென்ஸ் வைத்த நிலையில் இன்று ‘தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது’ என்று விடையைத் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், ‘இரும்பின் தொன்மை’ என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தையும் துவங்கி வைத்தார்.
அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர்,
‘இந்த விழாவில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வரை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். தமிழர்களின் தொன்மையை விளக்கும் வகையில் உலகிற்கு ஒரு மாபெரும் பயணத்தை அறிவிக்கப் போகிறேன்.
இங்கு கூடியிருப்பவர்களும், விழாவை நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேளுங்கள். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே மறுபடியும் சொல்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகமானது.
நம்மை கற்பனைவாதிகள் என்று சொன்னவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயுள்ளனர். தமிழ் பண்பாட்டை உலகிற்குச் சொல்லும் விழாவாக இது அமைந்துள்ளது. ஐம்பெரும் விழாவாக இந்த விழாவை நடத்தி வருகிறோம். பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பு தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் தான் தொடங்கியது
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு என்று நாம் இதுவரை சொல்லி வந்தவை இலக்கியப் புனைவுகள் அல்ல; வரலாற்று பெருமைகள்.
தமிழகத்தில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு. 6ம் நூற்றாண்டில் தொடங்கியது. பழம் பெருமை பேசுவது புதிய சாதனையை படைக்க ஊக்கமாக அமைய வேண்டும். இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். நமது பெருமைகளை நமது எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழக சட்டசபையின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.