Close
ஜனவரி 23, 2025 9:03 மணி

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமையவிருந்த பகுதி

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராமத் தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திப்பதற்கு தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைப்பதற்காக விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக சார்பில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

“சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.” என்று அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் நேற்று மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியிருக்கும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ”பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்திருக்கும் அண்ணாமலை, “அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று நிம்மதியாக தூங்குவார்கள்.டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாயப் பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு எடுத்த முயற்சி

தமிழக அரசும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதர் மோடியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து மற்றும் ஏலம் ரத்து என்ற அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கும் அரிட்டாபட்டி மக்கள், “டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துசெய்யப்பட்ட அறிவிப்பின் மூலம் எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டது” என்றும், ”ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் என்று துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top