Close
ஜனவரி 24, 2025 7:43 மணி

காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்…!

காப்பி

காலையில் எழுந்தவுடன் பலருக்கும் அந்த நாள் தொடங்குவது ஒரு டீ அல்லது காபியில் தான். டீ  , காபி குடிப்பது நல்லதா? என்னென்ன நன்மைகள்? பாதிப்புகள் உள்ளனவா? என தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லது என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காலையில் ஒரு கப் காபி குடிப்பது இதயத்திற்கு நன்மை தரும், ஆயுள் காலத்தை அதிகரிக்கும் எனக் கூறும் இந்த ஆய்வின் முடிவுகள் ‘யுரோப்பியன் ஹார்ட் ஜர்னல்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் காபியின் அளவை விட அதை எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறுகிறது. அதாவது காபியில் உள்ள காஃபின் ஆரோக்கியத்திற்கு உதவும் என்றாலும் காபியில் அழற்சி எதிர்ப்புப் பொருள்கள் உள்பட உயிரியல் சேர்மங்களும் உள்ளன.

எனவே, காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் போது அது உடலுக்கு குறிப்பாக இதயத்திற்கு சில நன்மைகளை வழங்குகிறது. மற்ற நேரங்களில் குடிக்கும் போது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறது.

இந்த ஆய்வின்படி, 1999 முதல் 2018 வரை ஒருநாளில் வெவ்வேறு நேரங்களில் காபி குடிப்பவர்கள் சுமார் 40,000- க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையை கண்காணித்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 36% பேர் காலையில் காபி குடித்தனர், அதே நேரத்தில் 16% பேர் பிற்பகலில் குடித்தனர்.

இதில் காலையில் காபி குடித்தவர்கள், பிற நேரங்களில் காபி குடித்தவர்களைவிட ஆரோக்கியமாக இருந்தனர். காலையில் காபி குடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 16% குறைவதாகவும் 10 ஆண்டுகளில் இதய நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு 31% குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நாள் முழுவதும் காபி அருந்துபவர்கள், அதாவது நாள் ஒன்றுக்கு ஒருமுறைக்கு மேல் காபி அருந்துபவர்களின் இதய ஆரோக்கியம் மோசமானதாகவே இருந்தது. அவர்களின் இறப்பு விகிதம் குறையவில்லை.

பகலில் காபி குடிப்பதால் அது ‘கிர்காடியன் ரிதம்’ எனும் உடல் இயக்கத்தில் தலையிட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், இதனால் தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம், ரத்த அழுத்தத்தை பாதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top