Close
ஜனவரி 27, 2025 7:17 மணி

கூட்டணியா? விஜய் என்ன செய்கிறார்? கவனிங்க..!

விஜய், எடப்பாடி பழனிசாமி

டில்லியில் நடந்த ரகசிய சந்திப்பில், பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க., தரப்பில் மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தலில், இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால், 14 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பது தேர்தல் முடிவில் தெரியவந்தது.

‘தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., இடம்பெற வேண்டும்’ என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சமீபத்தில் வலியுறுத்தினார். அவரது கோரிக்கைக்கு பின், அ.தி.மு.க.,வை விமர்சிப்பதை தமிழக பா,ஜ., தலைவர் அண்ணாமலை குறைத்துள்ளார். ‘வரும் 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி ஆட்சி அமைக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவோம்’ என்றும், அண்ணாமலை பேசி வருகிறார்.

தமிழக பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘பழனிசாமியிடம் பேசினாலே போதும்; அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி ஏற்பட்டு விடும்’ என்றார். அ.தி.மு.க., தரப்பும் இதை மறுக்கவில்லை. இதற்கிடையில், பா.ஜ.,வுடனான கூட்டணி முடிவு குறித்து அறிவிக்க, மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என, அ.தி.மு.க., தலைமை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக பா.ஜ., தலைவர் ஒருவரும், அ.தி.மு.க., தலைவர் ஒருவரின் வாரிசும், சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் டில்லி சென்றனர். பா.ஜ., மேலிட தலைவர்களை, மூவரும் ஒன்றாக சந்தித்து பேசினர். அந்த சந்திப்பில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை தெரிந்து கொண்ட பின், பா.ஜ., கூட்டணி முடிவை அறிவிக்கலாம் என, அ.தி.மு.க., தலைமை நினைக்கிறது. அதனால், பா.ஜ.,விடம் மூன்று மாத அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top