Close
பிப்ரவரி 23, 2025 3:48 மணி

இனி வெயில் வாட்டும்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற இரண்டு பருவமழைக்காலம் உள்ளது. தமிழகத்தின் சராசரியினை எடுத்துக் கொண்டால் இந்த கடந்த ஆண்டு மிகவும் சிறப்பான மழை கிடைத்தது.

ஆனால் சராசரி ஆய்வுப்படி 20 மாவட்டங்கள் தேவைக்கு அதிகமாக மழை பெற்றன. சில மாவட்டங்களில் இரண்டு மடங்கு அதிக மழை கூட பெய்தது. 10 மாவட்டங்கள் சராசரி மழை பெற்றன. எட்டு மாவட்டங்கள் மட்டும் சராசரிக்கு குறைவான மழை பெற்றன.

குறைவான மழை பெற்ற மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. ஒரு வழியாக பருவமழைக்காலம் முடிவுக்கு வந்து விட்டது. இப்போது கடும் பனி பெய்து வருகிறது.

இனி நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். தற்போதே பல மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த நிலை வரும் மார்ச், ஏப்ரல் வரை நீடிக்கும்.

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு காற்று சுழற்சி உருவாகி தென் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போதும் மாநிலம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இல்லை.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, குமரி ஆகிய தென் மாவட்டங்கள் 2 அல்லது 3 நாட்கள் ஒரு வலுவான மழையை சந்திக்கும்.

கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் மழை காலமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15  நாட்கள் மழை எதிர்பார்க்கலாம்.

மே மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் நல்ல மழையை பெறும். தமிழகத்தில்  ஜூன் மாதம் தான்  பருவமழை தொடங்கும்.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நல்ல மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top