Close
பிப்ரவரி 23, 2025 8:32 மணி

இபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளானை சுக்குநூறாக உடைத்த செங்கோட்டையன்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தாலும் கோவை  ஈரோடு சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் அதிமுகவை சேர்ந்தவர்களே  அதிக அளவில் எம்எல் ஏக்களாகவும் ஊராட்சி மன்ற தலைவர்களாவும் இருந்தனர்.

அதற்கு பிறகு திமுக ஆட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் மாநகாராட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 95 சதவிகித இடங்களையும் கைப்பற்றி அதிமுகவை பின்னுக்குத் தள்ளியது. ஆட்சியில் இல்லாத அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் மேயர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் பறிபோனதால் கோவை, ஈரோடு, சேலம் ,கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து திமுகவின் கை ஓங்கியது.

அதற்கு பிறகு முதலில் நடைபெற்ற  ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட்ட அதிமுக படு தோல்வியை தழுவிய நிலையில், தற்போது ஈவிகேஎஸ் மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியே இடாமல் ஒதுங்கிக்கொண்டது.

இப்படி கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி அரசியலால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  வருவதையும் அடுத்த  சட்டமன்ற  தேர்தலில் பலமான கூட்டணி அமைவதற்கான வாய்ப்பில்லை என்பதையும்  நன்கு உணர்ந்த இபிஎஸ் மீண்டும் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தி கட்சி தொண்டர்களை  உற்சாகப்படுத்த புதிதாக ஒரு மாஸ்டர் ப்ளானை வகுத்தார்.

அந்த திட்டத்தின் முதல்கட்டமாக கொங்கு மண்டலத்தில்  அதிகப்படியாக உள்ள விவசாய பெருங்குடி மக்களை தன் வசப்படுத்துவதற்காக அதிமுக ஆட்சியில் தான் முதல்வராக இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை நினைவுபடுத்தி அதன் மூலம் பயன் பெற்று வரும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து இழந்து போன கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க நினைத்தார்.

அதன்அடிப்படையில் கோவை மாவட்டசெயலாளர் வேலுமணியின் ஏற்பாட்டில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு விவாயிகள் நன்றி தெரிவிப்பது போன்ற ஒரு மிகப்பெரிய விழாவை நடத்தி அவ்விழாவில் விவசாயிகளின் நண்பனாக தன்னை காட்டிக்கொண்டு அதன் மூலம்  மற்ற மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தமுள்ள தமிழக  விவசாயிகளின் ஆதரவையும் அதிமுகவின் பக்கம் திருப்ப நினைத்தார்.

அதற்காக அன்னூரில் இபிஎஸ்க்கு அத்திக்கடவு அவிநாசி ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவிப்பது போல மாபெரும் கூட்டத்தைக் கூட்டி விழாவை நடத்திட உத்தரவிடப்பட்டது. இந்த விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு எந்த தலைவர்களின் படமும் இடம்பெறவில்லை.

அதாவது இந்த  விழாவை நடத்தும்  விவசாயிகள் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள்  என்றும் அதனால்  அத்திக்கடவு திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவரது படத்தை மட்டுமே முன்னிலை படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இந்த விளம்பர பேனர்களால் தான் இந்த மாஸ்டர் ப்ளானே சுக்குதூறாக சிதறிப்போகும் என்று இபிஎஸ்,வேலுமணி உள்ளிட்ட எவரும் நினைக்கவில்லை. விழா தொடர்பான விளம்பர பதாகைகளில் இபிஎஸ் படத்தை மட்டும் உள்ளதையும் அதிமுகவின் முக்கிய தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லை

இதனை கட்சிக்காரர்கள் மூலமாக அறிந்த அதிமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், விழாவை ஏற்பாடு செய்துவரும் ஒருங்கிணைப்புக் குழுவிடம் விசாரித்தபின் இபிஎஸ் படம் மட்டுமே பேனர்களில் இருக்கும் என்பதை  ஏன் எனக்கு முன்கூட்டியே  தெரிவிக்காமல் விட்டீர்கள் என கொஞ்சம் ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை

இந்நிலையில் அதற்கு அடுத்தநாள்  செய்தித்தாள்களில் இபிஎஸ்க்கு நடந்த பாராட்டு விழாவில் அதிமுகவின்  முக்கிய தலைவர்கள் படம் இடம்பெறாததால் நான் அந்த விழாவுக்கு செல்லவில்லை என செங்கோட்டையன் கருத்து தெரிவித்தாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோபிசெட்டிபாளையம் அருகே நடத்த ஒரு நிகழ்ச்சியில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை துவங்குவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் முதன்முதல் நிதி ஒதுக்கினார் என்றும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் தான் திட்டத்தினை ஆய்வு செய்ய உத்தரவிட்டார் என்றும்  என்னை ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் இடம் பெறாத காரணத்தினால் தான் பாராட்டு விழாவிற்கு செல்லவில்லையென ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தவுடன் அந்த செய்தி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி  பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்ஜிஆர் ஜெயலலிதாவின் படங்களை போடாமல் இபிஎஸ் அவரது படத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி விழா நடத்தியது தவறு என்று செங்கோட்டையன் சொல்லும் கருத்து சரியென்ற  மனநிலையை அதிமுக தொண்டர்கள் மத்தியில் உருவாக்கியது.

கொங்குமண்டலத்தில் அதிமுவின் செல்வாக்கை உயர்த்தி அடுத்தமுறை முதல்வராகலாம் என்று இபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளானை  எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தி சுக்குநூறாக உடைத்ததோடு கட்சியை உருவாக்கிய தலைவர்களின் பெயரை மறைத்து தனது பெயரை முன்னிலை படுத்த நினைத்த திட்டத்தினை வகுத்தது இபிஎஸ் தான் என்பது போல செங்கோட்டையன் தெரிவித்த கருத்து எம்ஜிஆர் ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் இபிஎஸ் மீது மேலும் வெறுப்பையே ஏற்படுத்தியது.

விவசாயிகளின் பெயரில் பாராட்டு விழா நடத்தி அடுத்து வரும் தேர்தலுக்குள் தனது இமேஜை உயர்த்திக்கொள்ளலாம் என்று இபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளான் இப்போது அவரது பெயரை டேமேஜ் செய்து எம்ஜிஆர் ஜெயலலிதாவை முன்னிறுத்தி  பேசிய செங்கோட்டையனுக்கு பழைய கட்சிக்காரர்களின் ஆதரவும் இமேஜூம் கூடியுள்ளது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிமுக தலைமை மீது  அதிருப்தியுடன் கருத்துக்களை தெரிவித்த செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வினை இபிஎஸ் மற்றும் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top