Close
பிப்ரவரி 22, 2025 7:46 மணி

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் 104 சிலம்ப வீரர்கள் உலக சாதனை..!

உலக சாதனைக்கான சான்றிதழ் பெறும் சிலம்பப் பயிற்சி நிறுவன நிர்வாகி

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில், சிறுவர் முதல் இளைஞர் என 104 சிலம்ப வீரர்கள் கடும் வெயிலை பெருட்படுத்தாது மண்பானை மீது நின்று மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்து தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

தமிழக பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம் கலை தற்போது வெகு எழுச்சி பெற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வத்தை தூண்டி அதனை கற்று பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்று வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் தா. பாண்டியராஜன் தலைமையில், காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் , மண் பானை மீது மூன்று மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியினை முன்னாள் கைத்தறிதுறை அமைச்சர் வி. சோமசுந்தரம் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து , நான்கு வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை என 104 பேர் மண் பானையின் மீது நின்று 3 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியை தொடங்கினர்.

நோபல் உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்ச்சி பதிவு செய்யும் நோக்கில் அதனுடைய நிர்வாகிகள் வினோத் மற்றும் அன்பரசி ஆகியோர் நடுவர்களாக இருந்து பதிவுகள் செய்து நிகழ்வினை கண்காணித்து வந்தனர்.

மாணவர்களை பாடல்கள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகத்துடன் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வந்த நிலையில் சோர்வையும் மாணவர்கள் பொருட்படுத்தாது சாதனை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு 3 மணி நேரத்தை நிறைவு செய்தனர்.

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மைய மாணவர்கள் மேற்கொண்ட இந்த சாதனை நிகழ்ச்சியில் பரிசளிப்பு விழாவில் இந்தியன் சிலம்பம் ஃபெடரேஷன் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர் வலசை. முத்துராமன்ஜி, காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் லட்சுமணன் முன்னிலையில் காஞ்சி சிலம்பம் பயிற்சி மைய பயிற்சியாளர் பாண்டியராஜனிடம் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என அறிவித்து அதன் நிர்வாக அதிகாரி வினோத் வழங்கினர்.

இதில் கலந்து கொண்டு பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி முத்துராமன் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிலம்பம் வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விளையாட்டு ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top