தென்காசி அருகே கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி இந்து சமய அறநிலயத்துறை நோட்டீஸ் – அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் – தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்.
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சில்லரைப்புரவு ஊராட்சி. இந்த ஊராட்சியில் குறுக்கிட்டானூர், முத்துமாலைபுரம், வேலப்பனூர், காக்கையனூர், ராமநாதபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் சுமார் 53 ஏக்கர் நிலம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 260-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் இதுவரை கோயில் நிலத்தில் குடியிருந்து வந்ததற்கான வரித்தொகை செலுத்த வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது கோயில் நிலத்தில் குடியிருந்து வரும் 260 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலா ரூ.6 லட்சம் வரிப் பாக்கி தொகையை கோயில் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டும். அபராத தொகை கட்ட தவறினால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றும் தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் நாங்கள் எப்படி ரூ. 6 லட்சம் பணத்தை கட்ட முடியும் எனக் கூறி கடந்த மாதம் 29ம் தேதி அன்று தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் சந்தித்து அந்தப் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து 20 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீண்டும் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 6 கிராமங்களில் கருப்பு கொடியை ஏற்றி வைத்ததுடன் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தில் உள்ள ராமசாமி கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களது ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு காட்டில் குடியேறுவோம் என தெரிவித்துள்ளனர்.