Close
பிப்ரவரி 23, 2025 2:04 காலை

திருச்செந்தூர் – பழனி ரயில் இயக்க தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கை..!

பேட்டிஅளித்த ராஜேந்திரன், மதிமுக துணை பொது செயலாளர்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூரையும், பழனியையும் இணைத்து ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென மதிமுக சார்பாக தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலாளர் தி.மு. ராசேந்திரன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாவட்டத்தில் இரட்டைக்குளம் கால்வாய், ராமநதி – ஜம்பு நதி பாசன திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படுவதில் மதிமுக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தி.மு. ராசேந்திரன் விரிவாக எடுத்துரைத்தார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்ட அவர், அதனை திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூர் – பழனி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ஆன்மீக பக்தர்கள் திருச்செந்தூரையும் பழனியையும் இணைத்து ரயில்களை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி ரயில் இயக்கப்படும் போது திருச்செந்தூர் – தென்காசி காசி விஸ்வநாதர் – சங்கரன்கோவில் கோமதி அம்பாள் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி என்று ஆன்மீக தலங்கள் அனைத்தும் இணைக்கப்படும்.

திருச்செந்தூர் பழனி என 2 அறுபடை வீடுகளையும் இணைக்கும்போது அத்துடன் திருப்பரங்குன்றமும் இந்த வழித்தடத்தில் இணைந்து கொள்ளும். ஆகவே 3 அறுபடை வீடுகளையும் ஏராளமான ஆன்மீக தலங்களையும் ஒருங்கிணைக்க கூடிய திருச்செந்தூர் – தென்காசி – பழனி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை தென்னக ரயில்வே மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top