நாமக்கல்:
தரமற்ற வெளிநாட்டு டயர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
சங்க செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மல்லீஸ்வரன் வரவு செலவு கணக்கு வாசித்தார். கூட்டத்தில், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் தரமற்ற டயர்களை உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு அனுப்பி குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
டயர் ரீட்ரேடிங் தொழிலும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் தரமற்ற டயர்களை மத்திய அரசு தடை செய்து உள்நாட்டில், தரக்கட்டுப்பாட்டுடன் உற்பத்தி செய்யப்படும் டயர்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போதிலும், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. எனவே நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு பணிகளை விரைவாக முடித்து, நாமக்கல் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகின்ற தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில், டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையான, விசைத்தறிகளுக்கு வழங்குவதைப்போல் மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க துணை தலைவர் தர்மலிங்கம், துணை செயலாளர்கள் வெங்கடேஷ், ,ஹரி உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.