Close
பிப்ரவரி 22, 2025 9:51 மணி

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நவீன இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஸ்டீம் லாண்டரி, சலவை இயந்திரத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் :

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரங்களை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சமையல் செய்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு சமைப்பதற்கு நிரந்தர பணியாளர்களாக 2 சமையலர்கள், 3 தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சாம்பார், பால், ரொட்டி ஆகிய உணவு வகையும், மதியம் அரிசி சாதம், சாம்பார், காய்கறி, கீரை பொரியல், வாழைப்பழம். முட்டை, தயிர் மற்றும் இரவு உணவாக ரவாகிச்சடி, அவித்த சுண்டல், பால், ரொட்டி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

சமையற்கூடத்தில் ஸ்டீம் பாய்லர் உள்ளிட்ட நவீன சமையல் இயந்திரங்களைக் கொண்டு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. காய்கறி நறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு காய்கறிகள் நறுக்கப்பட்டு உணவு சமைக்கப்படுகிறது.

மேலும், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் துணிகளை சலவை செய்வதற்காகநவீன நீராவி சலவை இயந்திரம் (ஸ்டீம் லாண்டரி) அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தினசரி சுமார் 500 க்கு மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஆபரேசன் தியேட்டர் உடைகள் பெறப்பட்டு தேசிய மெடிக்கல் கவுன்சில் வழிகாட்டு விதிமுறைகளின்படி ஸ்டீம் லாண்டரி இயந்திரங்கள் மூலம் சலவை செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நவீன சலவையகத்தில் துணி துவைக்க 3 துணி துவைக்கும் இயந்திரங்கள், துணிகளை உலர்த்துவதற்கு 3 நீர் உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி அயர்ன் செய்ய சலவைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top