நாமக்கல் :
விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும் என துணை இயக்குனர் கூறியுள்ளார்.
இது குறித்து, சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கான விதை ஆய்வுத் துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விவசாயிகளுக்கு பருவத்திற்கேற்ற தரமான விதைகள் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதே விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் நோக்கமாகும். இதனடிப்படையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் விதை விற்பனை நிலையங்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கையுடன், இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்து இருப்பு வைத்திருக்க வேண்டும். அதே போல விதை விற்பனைக்கான பதிவுச் சான்றிதழை, ஒவ்வொரு விதை விற்பனையாளர்களும் வைத்திருக்க வேண்டும். விதை இருப்பு, விலை விபரத்தை நாள் தோறும் பதிவு செய்து விளம்பரப் பலகை வைத்திருக்க வேண்டும்.
கொள்முதல் பட்டியல், விற்பனைப் பட்டியல் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை செய்யும் போது விற்பனைப் பட்டியலை விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்கி அவர்களுடைய கையொப்பம் பெற வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை உற்பத்தியாளர்களிள் பதிவு சான்றிதழ் புதுப்பிக்கப்படாத விதைகளை, விற்பனையாளர்கள் கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.