Close
பிப்ரவரி 23, 2025 3:57 காலை

தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் : மீண்டும் இயக்க எம்.எல்.ஏ., பழனி நாடார் கடிதம்..!

எம்.எல்.ஏ., பழனி நாடார்

நூற்றாண்டுகளாக பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தென்காசி வழியாக மீட்டர் கேஜ் காலத்தில், இயக்கப்பட்ட மிக முக்கிய ரயில் சேவைகளான நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி, மற்றும் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிர்நாடியாக இருந்து வந்தது. மேலும் அன்றாடம் ரயிலில் பயணிப்போர், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு இந்த நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் மிக முக்கிய பங்காற்றும். மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு பொருளாதாரம் மேம்பாட்டுக்கும் மிக முக்கிய பங்காற்றும்.

தற்போது பாவூர்சத்திரம் தென்காசி வழியாக நெல்லை கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகளும் மின்மயமாக்கல் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் நெல்லை கொல்லம் இடையே தென்காசி வழியாக ரயில்கள் நேரடியாக இயக்குவதில் எந்தத் தடையும் இல்லை.

எனவே தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை – கொல்லம் இடையே தென்காசி வழியாக மூன்று ஜோடி ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top