நாமக்கல் :
நாமக்கல் அருகே அனுமதியின்றி கல்குவாரி இயங்கிய விவகாரத்தில், அரசுக்கு தகவல் தெரிவிக்காத 2 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் உள்ள, அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த, 19ம் தேதி, நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீசாருடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு கல் உடைத்துக் கொண்டு இருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். அதையடுத்து, கல்குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும் ஹிட்டாச்சி இயந்திரம், கம்ப்ரசர் டிராக்டர்கள், லாரிகள், டூவீலர் உள்பட 23 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார், சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததாக சிவக்குமார், சுபாஷ், வி.சி.பி. பழனிசாமி, மற்றொரு பழனிசாமி மற்றும் சந்துருமலை ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து, அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி, கொண்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதேபோல் கனிமவளத்துறையிலும், உதவி புவியியல் ஆய்வாளர் ஒருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.