Close
பிப்ரவரி 24, 2025 9:35 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்..!

மங்களபுரம் முதல்வர் மருந்தகத்தில், முதல் மருந்து விற்பனையை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, கூட்டுறவு இணை பதிவாளர் அருளரசு ஆகியோர்.

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்படும் என, அமைச்சர் மதிவேந்தன்கூறினார்.

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில், திம்மநாயக்கன்பட்டி, அத்தனூர் – ஆயிபாளையம், மங்களபுரம் மற்றும் பிள்ளாநல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மருந்து முதல் விற்பனையை துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர், குறைந்த விலையில் ஜெனரிக் மருந்து, மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை துவக்கி வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 17 கூட்டுறவு சங்கங்களின் மருந்தகங்கள், 10 தனிநபர் மருந்தகங்கள் என மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்.

இம்மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முதல்வர் மருந்தகங்கள் மூலம் சுமார் 75 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு ரூ.3 லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும்போது, அரசு மானியத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறுது. அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 17 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.17.00 லட்சம், 10 தொழில்முனைவோர்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.32.00 லட்சம் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, கூட்டுறவு சங்க இஐணப்பதிவாளர் அருளரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top