இலவச பட்டா வழங்குதல், கல்குவாரியில் இருந்து கனரக வாகனங்கள் செல்வதை தடுத்தல், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த மூன்று வருடங்களாக அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் , மனுக்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சித்தன்னக்காவூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர் தங்கள் கிராமம் சார்ந்த 8 பிரச்சனைகளை முன்னிறுத்தி கடந்த மூன்று வருட காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததாகவும்,
அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்ட அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தான் இதுவரை அளித்த மனுக்களை வரிசையாக அடுக்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த மனு விவரங்கள் மற்றும் அதன் நிலைபாடுகள் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என்பதை விளக்கத்துடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உத்திரமேரூர் வட்டாட்சியரை அழைத்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு பட்டா வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவைகளை சரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.
மூன்றாண்டுகளாக மனுக்கள் மீது நடவடிக்கை என ஆளும் கட்சியின் கூட்டணி ஊராட்சி தலைவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் பரபரப்பு ஏற்படுத்தியது.