Close
மார்ச் 5, 2025 2:04 காலை

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

Namakkal

கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் பெரியமணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ், அவர் நாமக்கல் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் உள்ள பதிநகரில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது மனைவி மோகனபிரியா (33). தம்பதியருக்கு, பிரினிதிராஜ் (6) என்ற மகளும், பிரினிராஜ் (2) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் வரை, பிரேம்ராஜின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

அதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் மோகனபிரியா மற்றும் 2 குழந்தைகளும் மர்மமான முறையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு சென்ற ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார், 3 சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பபி வைத்தனர்.

நாமக்கல் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த மோகனபிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் (பழைய படம்).

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரேம்ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சம் வரை இழந்துள்ளதாகவும், கடனை எப்படி கட்டுவது என்பது தெரியாமல் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு மாயமானதாகவும் தெரிகிறது. தற்போது, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கணவர் பிரேம்ராஜை தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர்.

ஆனால், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். மாயமான பிரேம்ராஜை பிடித்தால் மட்டுமே, 3 பேர் உயிரிழந்தது கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும் என்பதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதணை அறிக்கை கிடைத்தபிறகு வழக்கு விசாரணை மேலும் தீவிரமாகும் என தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top