மனித மூளையில் உயிர்ப்புறும் எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மனிதர்களால் பயன்படுத்தப்படும் ஒலி மற்றும் வரி வடிவங்களின் இணைத் தொகுதி தான் ‘மொழி’. மனித வாழ்க்கையில், தாய்க்கு இருக்கும் அதே முக்கியத்துவம் தாய்மொழிக்கும் அளிக்கப்படுகிறது. அந்த மொழியின் மீது தான் இனத்தின் இலக்கியம், கலை, பண்பாடு, மரபு, கல்வி, வரலாறு, மெய்யியல் போன்ற கூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. அதனால் தான் உலகம் முழுவதும் மனிதச்சமூகத்தால் போற்றப்படும், உணர்வுப்பூர்வமாக கையாளப்படும் மிகச்சிறந்த கருவியாக ‘மொழி’ நிலைத்திருக்கிறது.
மனித வரலாற்றில் 31,000 மொழிகள் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவித்தாலும், இன்றைக்கு 6,000 மொழிகள் மட்டும் உயிரோடு இருக்கின்றன. இந்த 6,000 மொழிகளை வாழையடி வாழையாக காலம் காத்து வந்திருக்கிறது. ஆனாலும், உலகமயமாக்கல் போன்ற தாராள பொருளாதார கொள்கைகளால் மொழியின் கட்டுடல் குலைந்து கொண்டே இருக்கிறது. பேசப்படாத மொழிகள் வேகமான அழிவைச் சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மொழிகளைக் காக்க கடுமையாக உழைத்து வருகின்றன.
பன்னாட்டு தாய்மொழி நாள்:
1947-ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்), மேற்கு பாகிஸ்தான் (தற்போது பாகிஸ்தான்) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் மொழி, பண்பாடு போன்றவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.
அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948-ஆம் ஆண்டின் அப்போதைய பாகிஸ்தான் அரசு உருது மொழியை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியை குறைந்தபட்சம் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். இந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு செவிசாய்க்கவில்லை.
இதை தொடர்ந்து, பொது மக்களின் ஆதரவுடன், தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினர். போராட்டத்தை முடக்குவதற்காக, மாணவர்கள் முன்னெடுத்த பொதுக் கூட்டங்களையும் பேரணிகளையும் பாகிஸ்தான் அரசு தடை செய்தது. 1952-ஆம் ஆண்டு பிப்.21-ஆம் தேதி தடையை மீறி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். தடையை மீறி பேரணி நடத்துவதாகக் குற்றம்சாட்டி, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தாய்மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த நிகழ்வு வரலாற்றில் அழிக்க முடியாத நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது. நாட்டின் பெரும்பான்மை மக்களின் மதம் இஸ்லாமியமாக இருந்தாலும், அந்நாட்டின் அனைத்து மதத்தினரும் பேசும் பொதுமொழியாக வங்கம் இருந்தது. மதத்தைக் காட்டிலும் தாய்மொழியை பெரிதாகப் போற்றிய அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டுக்கு மதவழிப் பெயரை சூடிக்கொள்ளாமல், மொழி வழிப்பெயரை சூட்டிக்கொண்டு, தங்கள் நாட்டை வங்கதேசம் என்று அழைத்துக்கொண்டனர். உங்களுக்கெல்லாம் தெரிந்தது போல, 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானில் இருந்து தனியாக பிரிந்து ‘வங்கதேசம்’ என்ற புதிய நாடு உருவானது. மொழிப்பெயரில் அழைக்கப்படும் ஒருசில நாடுகளில் வங்கதேசமும் ஒன்று.
வங்கதேசத்தில் நடந்த மொழிப்போராட்டம், மொழிக்காப்புக்கானது மட்டுமல்ல, மொழி திணிப்புக்கும் எதிரானதாகும். உருது மொழியின் ஆதிக்கத்திற்கு எதிராக, நாட்டையே துறந்து சொந்த மொழியில் நாட்டை உருவாக்கிக்கொண்டவர்கள் வங்கதேச மக்கள். வங்கதேசத்தில் தாய்மொழியைக் காப்பதற்காக நடந்த இந்த போராட்டம் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது. தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கருத்தியலை உலக மக்கள் அனைவரிடமும் அழுத்தம் திருத்தமாக கொண்டு சேர்க்கும் வகையில், வங்கதேச அரசின் முயற்சி, அனைத்துலக அமைப்புகளது ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, இனி பிப்.21-ஆம் நாளை பன்னாட்டு தாய்மொழி நாளாக கொண்டாடப்போவதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்(யுனெஸ்கோ) 1999-ஆம் ஆண்டு அறிவித்தது. தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பல்வேறு மொழிவழி சமூகங்களின் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் தனித்தன்மைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன் அம்மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்கும் எண்ணத்தோடு பன்னாட்டு தாய்மொழிநாள் அறிவிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முதல் பிப்.21-ஆம் நாள் உலகம் முழுவதும் பன்னாட்டு தாய்மொழிநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மொழி நாட்கள்:மொழியின் முக்கியத்துவத்தை சரியாக உணர்ந்து கொண்ட பல நாடுகளின் அரசுகள், பல்வேறு திட்டங்களை வகுத்து, அவற்றை பண ஆதாரங்களை ஒதுக்கி, தத்தமது மொழிகளை காக்க நடவடிக்கை எடுத்தவண்ணம் உள்ளன. இதற்கு இந்திய அரசும் விதிவிலக்கல்ல. 780 மொழிகளின் கூடாரமாக இந்தியா திகழ்வதால், தத்தமது மொழிகளை காக்க அந்தந்த மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க நேரிடுவது இயல்பு தான். அந்த வகையில், தமிழ்நாடு அரசும் தமிழ்மொழியை காத்து, அடுத்த தலைமுறையின் கையில் கொடுக்க ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
மொழிகளை காப்பாற்றும் நோக்கில், உலக அளவில் பல்வேறு மொழி நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒருசில மொழிகளுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும், இந்திய அளவில் அந்தந்த மாநில அரசுகள் மொழி நாட்களை அறிவித்து, மொழிக்காப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் உலக அளவில் கொண்டாடப்படும் மொழி நாட்களின் பட்டியல் இதோ….
உலக மொழி நாட்களின் பட்டியல்…
பிப்ரவரி 9 – கிரேக்க நாள்.
பிப்ரவரி 21 – பன்னாட்டு தாய்மொழி நாள்.
மார்ச் 20 – பிரெஞ்சு நாள்.
ஏப்ரல் 20 – சீன நாள்.
ஏப்ரல் 23 – ஸ்பானிஷ் நாள்.
ஏப்ரல் 23 – ஆங்கில நாள்.
மே 5 – போர்த்துகீசிய நாள்.
ஜூன் 6 – ரஷ்ய நாள்.
ஜூலை 7 – கிஸ்வாஹிலி நாள்.
செப்டம்பர் 23 – சைகை மொழி நாள்.
செப்டம்பர் 26 – ஐரோப்பிய மொழிகள் நாள்.
நவம்பர் 5 – ரொமானி நாள்.
டிசம்பர் 18 – அரேபிய நாள்.
இந்திய மொழி நாட்களின் பட்டியல்…
ஜனவரி 7 – சந்தாளி மொழி நாள்.
பிப்ரவரி 21 - வங்க மொழி நாள்.
பிப்ரவரி 27 – மராத்தி மொழிப்பெருமை நாள்.
மார்ச் 1 ஒடியா மொழி நாள்.
மே 1 – மராத்தி மொழி நாள்.
ஜூன் 24 – போஜ்பூரி மொழி நாள்.
ஆகஸ்ட் 1 – உலக கொங்கணி மொழி நாள்.
ஆகஸ்ட் (ஷ்ராவண மாத முழுநிலவு நாள்)- உலக சமஸ்கிருத மொழி நாள்.
ஆகஸ்ட் 20 – மணிப்பூரி மொழி நாள்.
ஆகஸ்ட் 20 - நேபாள மொழி நாள்.
ஆகஸ்ட் 24 – குஜராத்தி மொழி நாள்.
ஆகஸ்ட் 29 – தெலுங்கு மொழி நாள்.
செப்டம்பர் 14 – ஹிந்தி மொழி நாள்.
நவம்பர் 1 – கர்நாடக அல்லது கன்னட மொழி நாள்.
நவம்பர் 3-9- அஸ்ஸாமி மொழிப்பெருமை வாரம்
நவம்பர் 9 – உருது மொழி நாள்,டிசம்பர் முதல் ஞாயிறு – சிந்தி பண்பாட்டு நாள். டிசம்பர் 11 – இந்திய மொழிகள் நாள்(பாரதியார் பிறந்த நாள்)
போன்ற மொழி நாட்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன.
உலகத் தமிழ் நாள்?: ஆனால், இந்திய மொழிகளின் பட்டியலில், உலகின் தொன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் போற்றப்படும் ‘தமிழ் மொழி நாள்’ இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. உலகின் முதன்மொழி என்று மார்தட்டி பெருமைப்படும் தமிழர்களுக்கு, தங்கள் தாய்மொழியாம் தமிழை கொண்டாட தனியாக ஒரு மொழி நாள் இல்லை என்பது கசப்பான உண்மை. செம்மொழிக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள தமிழ்மொழி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர்ப்போடு தழைத்திருந்தாலும், உலகமயமாக்கலின் கெடுவிளைவாக ஏற்பட்டுள்ள மொழிக்கலப்பு போன்றவற்றால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதை மறுக்க முடியாது. வாழாத மொழியால் ஆளமுடியாது; ஆளாத மொழியால் வாழ முடியாது. வாழாத மொழியினரின் நிலம் வரலாற்றில் காணாது போகும். நிலத்தில் ஆளாத மனிதர்களால், மொழியை வாழ வைக்க முடியாது. எழுதப்படாத, படிக்கப்படாத, பேசப்படாத மொழியால் தழைக்க முடியாது. தழைக்காத மொழியால், அதன் இனத்தை வாழ வைக்க முடியாது என்பதை அறியாதவர்கள் அல்லர் தமிழர்கள்.
எனவே, தமிழ்மொழியை நிலைக்க, தழைக்க, வளர்க்க, பாதுகாக்க வேண்டும். மொழி பாதுகாக்கப்பட, அம்மொழி மொழிந்துகொண்டே இருக்க வேண்டும். மொழியாத மொழி அழியும். மொழியைப் பாதுகாக்க, மொழியைக் கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும். அதற்கு, தனியாக தமிழ் நாள் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
‘உலகத் தமிழ் நாள்’…கேட்கும்போதே உள்ளத்தில் உவகை ஊறுகிறது, மனதில் மத்தளம் ஒலிக்கிறது, நெஞ்சில் குதூகலம் தொற்றிக் கொள்கிறது. தமிழைக் கொண்டாட தனிநாள் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் உள்ளத்தைத் தொட்டு பறக்கிறது. ஆங்கில நாள், இந்தி நாள், சமஸ்கிருத நாள் உள்ளன என்பதற்காக, தமிழ் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக யாரும் கருதக்கூடாது. தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பெரும் கடமையை ஆற்றுவதற்கு கிடைத்துள்ள பொறுப்பான நாள் என்று தான் எண்ண வேண்டும்.
உலகமயமாக்கல் சூழலில் ஆதிக்கம் செலுத்தும் ஒருமொழி மற்றொருமொழியை வேகமாக விழுங்கி வருவதை உலகம் அறியும். மொழித்திணிப்பு, மொழி புறக்கணிப்பு போன்ற பல்வேறு மொழிப் படையெடுப்புகளில் தப்பிய தமிழை காக்கும் கடமை, பொறுப்பு தமிழனாக பிறந்த நம் அனைவருக்கும் உள்ளது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த நாளாகவே ‘உலகத் தமிழ் நாள்’ அமையும். இந்த நன்னாளில் இளம் தலைமுறையினரிடம் தமிழ்மொழியைக் கொண்டு சேர்த்து, கொண்டா டச் செய்யலாம். தலைமுறை கடந்தும் தமிழை கடத்தலாம்.
பாரதிதாசன் பிறந்தநாள்:
சரி, உலகத் தமிழ் நாளை கொண்டாடுவதற்கு எந்த நாளை தேர்ந்தெடுப்பது என்று சிலர் கேட்கலாம். அதற்கு பொருத்தமான விடை ஏப்ரல் 29. அன்று தான் உலகம் கண்டிராத மாபெரும் உலகக்கவிஞன் பாரதிதாசன் பிறந்தநாள். உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய தமிழ்க் குயில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். 20ஆம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். தாய்மொழியாம் தமிழை பலவாறாக உயர்த்தி பாடியது மட்டுமல்லாது, தமிழைக் காப்பதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இயக்கமாக செயல்படுத்த திட்டம் வகுத்துத் தந்தவர். மொழி மீது இத்துணை உயர் எண்ணம் கொண்டு பாடிய ஒரே பாவலன் பாரதிதாசன் மட்டுமே.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளான ஏப்ரல் 23ஆம் நாளை ஆங்கில நாளாகவும், கவிஞர் கிடுகு வெங்கட ராமமூர்த்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஐ தெலுங்கு நாளாகவும், எழுத்தாளர் வீர் நர்மத்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 24ஐ குஜராத்தி நாளாகவும் கொண்டா டுவது போல, தமிழினத்தின் தன்மானத்திற் காகவும், மொழிமானத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் இலக்கியம் படைத்த புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 29ஐ உலகத் தமிழ் நாள் என்று அறிவித்து, அந்த மாக்கவிஞருக்கு பெருமை சேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையால்லவா!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறித்து பேரறிஞர் அண்ணா , “படிக்கிறோம்; பாரதிதாசனாக நாமே ஆகிறோம்.படிக்கிறோம்; நாமும் பாடலாமா என நினைக்கிறோம்.படிக்கிறோம்; ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்கின்றோம்”
“புரட்சிக் கவிஞர் மேல்நாட்டுக் கவிதைகளைப் போல் கலையைக் காலத்தின் கண்ணாடி ஆக்குகிறார்!,காலத்தை உருவாக்குகிறார்!, காலத்தையே உருவாக்குகிறார் என்பது மாத்திரமல்ல; காலத்தையே மாற்றுகிறார்.” என்று போற்றுகிறார்.
“கவிதையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னர். புரட்சி உணர்வில் அவர் தமிழ்நாட்டு ஷெல்லி; இயற்கையைப் பாடுவதில் அவர் வால்ட் விட்மன்; வரலாற்றைக் காவியமாக்குவதில் அவர் இளங்கோ; வருணனையில், சொல் வளத்தில் அவர் கம்பர்; காலத்தின் தேவையில் அவர் பாரதி; நம்முடைய உள்ளத்தில் அவர் என்றும் பாவேந்தர்” என்று பேராசிரியர் க.அன்பழகன் பாரதிதாசனை படம் பிடித்துக் காட்டுகிறார். எனவே, உலகத் தமிழ் நாள் என்று அறிவிப்பதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29 மிகவும் பொருத்தமான நாளாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தமிழ் அமைப்புகள் கொண்டாட்டம்:
இது தொடர்பாக, 2022ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழறிஞர்கள், உலகத் தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி, ஏப்ரல் 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக அறிவித்திடுக, பாரதிதாசனுக்கு சென்னையில் மணிமண்படம் அமைத்திடுக என்ற இரு தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளன. திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களும் இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பேசியிருக்கிறார், விடுதலை நாளிதழில் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திராவிட மாடல் அரசு தான் தமிழுக்கும், பாரதிதாசனுக்கும் பெருமை சேர்க்க முடியும். எனவே, 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று உலகத் தமிழர்களின் சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த குரல், தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாக மாறி, ஓங்குரலாக உருவெடுத்துள்ளதால், விரைவில் உலகத் தமிழ் நாள் மலர்வது திண்ணம்.
தமிழ்நாட்டரசின் அறிவிப்பு வரும்வரை காத்திராமல், உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள், கடந்த 3 ஆண்டுகளாகவே ஏப்ரல் 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாகக் கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், பெங்களூரின் பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றம், மும்பை இலெமுரியா அறக்கட்டளை, கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் போன்ற அமைப்புகள் உலகத் தமிழ் நாளை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஏப்ரல் 29ஆம் நாளை உலகத் தமிழ் நாளாக கொண்டாடு வதற்கான அரசாணையை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை முன்னாள் தலைவரும், நல்லறிஞருமான முனைவர் பாலா.சுவாமிநாதன் 3 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டார் என்பது போற்றத்தகுந்தது ஆகும்.
உலகத் தமிழா ஒன்றுபடு:
தமிழ்மொழியை கொண்டாடி மகிழவும், அடுத்த தலைமுறையின் கைகளில் நம் மொழியை பாதுகாப்பாகக் கையளிக்கவும், அதற்குரிய திட்டங்களை வகுக்கவும் ‘உலகத் தமிழ் நாள்’ என்ற அறிவிப்பு வெளியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதுவரை.. உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள்! உலகத் தமிழ் நாளைக் கொண்டாடுங்கள்!
#-முத்துமணி நன்னன், தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு.#