கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது.
இச்சன்னதி எதிரே திருக்குளம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக இது விளங்கி வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வளர்ச்சி காரணமாக திருக்குளத்தில் கட்டிடக்கழிவுகளும் குப்பைகளும் கொட்டியும், திறந்தவெளி மலம் கழிக்கும் பகுதியாக வும் திருக்குளத்தை அசுத்தப்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் மாமன்ற உறுப்பினர் செவிலிமேடு மோகனுக்கு வந்தது.
இந்நிலையில் இத்திருக்குளத்தை புனரமைத்து மீட்கும் பணியினை கடந்த சில தினங்களுக்கு முன்பு துவக்கி திருக்குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் வகையில் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது குளத்தில் உள்ளே உள்ள கழிவுகள் மரங்கள் உள்ளிட்டவைகளை சீரமைக்கும் பணியை ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மாமன்ற உறுப்பினர் செவிமேடு மோகன், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில் குளத்தினை மீட்கும் பணியினை தொடங்கி உள்ளதாகவும், திருக்குளத்தை தூர்வாரியும் நடைபாதை அமைத்து பாரம்பரியத்தை காக்கும் வகையில் செயல்பட உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதி அல்லது மாவட்ட ஆட்சியரின் பொது பங்களிப்பு நிதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒதுக்கீடு செய்து பாரம்பரியத்தை மீட்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இந்த ராமானுஜர் சன்னதி அருகே உள்ள சாலை கிணறு பகுதியில் இருந்து தான் நாள்தோறும் காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு நாள்தோறும் புனித நீர் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.