Close
மார்ச் 18, 2025 9:41 மணி

காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு இலவச பேருந்து பயண அட்டை..!

காவல்துறையினருக்கான இலவச பஸ் பாஸ்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையின் கீழ் 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர்கள் என பல நிலைகளில் காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர்.

பணிபுரியும் இடம் மற்றும் தங்கியுள்ள பகுதி தூரம் உள்ள நிலையிலும், காவல்துறை பணிக்காக செல்லும் நிலையில் பேருந்தில் செல்லும் நிலை ஏற்படும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துனர்கள் சில சமயம் இலவசமாக பயணிக்க அனுமதிப்பதும் சிலர் அரசு உத்தரவு கேட்பதும் என்ற நிலையில் சில நேரம் வாக்குவாதம் எழுகிறது.

இந்த பிரச்னையை போக்கிட காவல்துறையினருக்கு வருவாய் மாவட்டத்திற்குள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயண அட்டை வழங்கும் முறை கடந்த சில நாள் முன்பு துவங்கியது.

வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் 863 நபர்களுக்கு இலவச பயண அட்டை மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த பயண அட்டையில் காவலர் பெயர் , பணி நிலை, தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் அதில் பதியப்பட்டுள்ளது.

மேலும் பயண அட்டையில் குறிப்பிட்டுள்ள காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பிட்டுள்ள வருவாய் மாவட்டத்துக்குள் மட்டுமே பயணம் செல்லுபடியாகும்.

பயண அட்டையில் குறிப்பிட்டுள்ள நபர் நகர மற்றும் புறநகர பேருந்துகளில் மட்டும் பயணம் செய்ய அனுமதி உண்டு (அனைத்து ஏ.சி.மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர்த்து).

பயண அட்டையை நடத்துனரோ அல்லது பரிசோதகரோ சோதனைக்காக கேட்டால் காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்க தவறினால் நடைமுறையில் உள்ள சட்டப்படி அபராத தொகை உரியவரிடம் வசூலிக்கப்படும்.

பயண அட்டையை தவறாக பயன்படுத்தியதாக கண்டறிந்தால் பயண அட்டை பறிமுதல் செய்யப்படுவதுடன், அலுவலக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயண அட்டை தொலைந்து போனால் எக்காரணத்தை முன்னிட்டும் மாற்று பயண அட்டையோ அல்லது அதற்கான தொகையோ வழங்க இயலாது.

இருக்கை பெறும் உரிமையை உறுதி செய்ய இயலாது. மேலும் பழுதடைதல், பேருந்து இயக்க தடை அல்லது தற்செயலாக ஏற்படும் விபத்துகள் போன்றவைகளுக்கு காரணம் எதுவானாலும் கழகம் பொறுப்பேற்க இயலாது.

பயண அட்டையில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்கு பின்னர் அப்பயண அட்டையை இவ்வலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாறுதல் ஆகி இருந்தால், பழைய அட்டையை ஒப்படைத்து, உரிய பயண அட்டை மீண்டும் பெற வேண்டும் என நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top