Close
மார்ச் 19, 2025 5:07 மணி

முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : நல உதவிகள் வழங்கும் விழா..!

முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி நல உதவிகள் வழங்கப்பட்டன

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக இளைஞரணி சார்பில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா பூக்கடை சத்திரம் பகுதியில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் , திமுக கொள்கை பரப்பு செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் கழக பேச்சாளரும் தேர்தல் பணிக்குழு உறுப்பினருமான கடலூர் புகழேந்தி கலந்து கொண்டு திமுக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பேசுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏராளமான திட்டங்கள் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் எனவும், குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல்வர் படைப்பகம் ( CM Space ) எனும் திட்டம் செயல்படுத்த அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,

இதன் மூலம் பல்வேறு உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் செலுத்தி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இணையதள வசதியுடன் கூடிய கணினி மூலம் தனக்கு வேண்டிய புத்தகங்கள் அறிவு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாது தனி நபர்கள் தங்களது அலுவலகத்தையும் நாளொன்றுக்கு 50 ரூபாய் செலுத்தி இங்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அலுவலக கூட்டங்களுக்கும் இங்கு பணம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட உள்ளது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாகவும் தங்களுடைய இலக்கை அடைய இது பெரிதும் உதவும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர இளைஞரணி நிர்வாகிகள் சுகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top