Close
ஏப்ரல் 5, 2025 1:42 மணி

பெரியபாளையம் அருகே சவுடு மண் லாரிகளை சிறை பிடித்த வியாபாரிகள்,பொதுமக்கள்..! போக்குவரத்து பாதிப்பு..!

சவுடு மண் லாரிகளை மறித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்

பெரியபாளையம் அருகே சவுடு மண் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்து வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம். லாரிகளில் அதிகளவு மண் ஏற்றி செல்வதாகவும் முறையாக தார்ப்பாய் மூடாமல் கொண்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார்.போக்குவரத்து பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அரியப்பாக்கம் பகுதியில் சவுடு மண் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குவாரியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சவுடு மண்ணை ஏற்றிக்கொண்டு பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் வழியாக மண் ஏற்றிச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் கன்னிகைப்பேர் கூட்டுச்சாலையில் சவுடு மண் ஏற்றி வந்த லாரிகளை வியாபாரிகளும், பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அப்போது வியாபாரிகள் தெரிவிக்கையில்:-

கன்னிகைப்பேரில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கொண்ட பள்ளிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி, மாணவர்களும் கல்வி பயில்வதற்காக இங்கு வந்து செல்கின்றனர்.

பள்ளிகளுக்கு செல்ல சாலை கடந்து செல்ல மிகச் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் நடத்தி வருவதாகவும், குவாரியிலிருந்து மண் ஏற்றி வரும் லாரிகளில் மீது முறையாக தார்ப்பாய் மூடாமல் மின்னல் வேகத்தில் வருவதால் பின்னே வரும் இருசக்கர வாகனங்கள் மீது மணல் கட்டிகள் சில நேரங்களில் மேலே விழுந்தும், கண்களில் தூசி படிந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும்,

வேகமாக லாரிகள் வந்து செல்வதால் கடைகளில் இருக்கும் பொருட்கள் மீதும், தூசி படிவதால் பொருட்கள் வீணாக செல்வதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாகவும்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், போலீசாரிடமும் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்.இதே நிலைமை மீண்டும் நீடித்தால் பெரிய அளவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.

எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்தப் போராட்டத்தால் சுமார் 1. மணி நேரம் கன்னிகைப்பேர்- திருக்கண்டலம் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top