தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959 -ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம்.
சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள், தரையில் இழுபடும் உத்தரீயம் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது.
நாயக்க மன்னர்களை பற்றிய சிற்பங்களை தவிர வேறு தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்கான நேரடி சான்றுகளாக எதையும் காண முடியவில்லை. ஒன்றிரண்டு ஒவியங்களில் சோழ மன்னர்களின் உருவம் காணப்படுகிறது. சேரன் பாண்டியன் போன்றவர்களின் தோற்றமும் செயல்களும் கவிதைகளில் தான் அதிகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் சிவகங்கை சீமை முன்னோடியான தமிழ்படம். இதில் தான் முதன்முறையாக மன்னர்கள் வேஷ்டி அணிந்து மேல்துண்டுடன் வந்தனர். பகட்டான ஜிகினா அலங்காரங்கள் கிடையாது. சின்னமருது, பெரியமருது இருவரையும் பற்றிய படம். பெரிய மருதுவாக நடித்துள்ள பகவதி எந்த நேரமும் வீரவசனம் பேசமாட்டார். மிக இயல்பாக, எளிமையான, நிஜமான மனிதராக தோற்றம் தருகிறார். அது போலவே படத்தில் வரும் பெண்களும் கண்டாங்கி சேலைகள் கட்டி, கனகாம்பரம் முல்லை மல்லிகை சூடி யதார்த்தமாக இருக்கிறார்கள்.
சிவகங்கை சீமையின் வரலாறு சரித்திர புத்தங்களில் கூட சிறிதளவே கவனப்படுத்தபட்டிருக்கிறது. மதுரை சீமையை பற்றிய எண்ணிக் கையற்ற சரித்திர குறிப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் காணும் போது சிவகங்கையின் வரலாறு அதிகம் எழுதப்படவேயில்லை என்றே தோன்றுகிறது.
அன்றைய சிவகங்கை சீமை என்பது தெக்கூர்,ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள் தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்தவர். அதனால் அவர் சிவகங்கை சீமையின் வரலாற்றினை ஆழ்ந்து அறிந்திருக்கிறார்.
மருது சகோதர்களை பற்றிய நாட்டார்கதைகளையும் பாடல்களையும் கூட கண்ணதாசன் சிறப்பாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில் பகுதிகளில் பெரிதும் படமாக்கியிருக்கிறார். படத்தில் வரும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். துபாஷி தான் அதை மொழிபெயர்த்து சொல்கிறார். கோட்டைகள், வீடு யாவும் அந்த நிலப்பகுதியின் யதார்த்தமான கட்டிடங்களாக உள்ளது.
கட்டபொம்மனை பிடித்து வெள்யையர்கள் தூக்கலிட்டதால் அவரது தம்பியான ஊமைத்துரை சிவகங்கை சீமையில் அடைக்கலமாகிறார். பெரிய மருதுவிற்கு தெரியாமல் சின்னமருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் தருகிறார். அது வெள்ளையர்களுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மருது சகோதர்கள் ஊமைதுரையை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அனுமதியில்லாமல் அரண்மனைக்குள் தேட முயற்சிக்கிறார்கள். ஊமை துரையை கைது செய்து தூக்கிலடுவோம் என்று ஆவேசப்படுகிறார்கள். நம்பிவந்தவரை காட்டி கொடுப்பது நட்பல்ல என்று வெள்ளையர்களை மருதிருவர் எதிர்க்கிறார்கள்.
வெல்ஷ் துரை அவர்களை எதிர்த்து சண்டையிட்டு மருது குடும்பத்தினரை சிறை பிடிக்கிறான். பெரிய மருதுவின் தலையை துண்டித்து காளையார் கோவில் முன்பாக போடுகிறான். உடலை தனியே திருப்பத்தூரில் யாரும் அறியாமல் புதைத்தான். மருது குடும்பத்தில் எவரையும் விட்டுவைக்காமல் பழிதீர்த்தது வெள்ளை அரசு.
சிவகங்கை சீமையை படமாக்க வேண்டும் என்ற யோசனைக்கு காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் படம் என்கிறார்கள். நானே ஒரு முறை ம.பொ.சி. அய்யா அவர்களை நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் கதை ஆய்வில் துணை இருந்ததாகவும் சினிமாவிற்காக நிறைய சேர்ந்தார்கள் என்று சொல்லியபடியே சில விஷயங்களை நினைவுகூர்ந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே நேரத்தில் தயாரிக்கபட்டிருக்கின்றன. கண்ணதாசன் மலையிட்டமங்கை படத்தை தயாரித்து பெரிய வெற்றிருந்தால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் சிவகங்கை சீமை படத்திற்கும் இடையே தேவையற்ற மோதல்கள், சர்ச்சைகள் உருவாகின. அதை பலர் தூண்டி விட்டனர்.
கண்ணதாசனே இதை பற்றி தனது வனவாசம் நூலில் எழுதும் போது தான் செய்த ஒரே தவறு இந்த படத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு முன்பாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு இது வெளியாகி இருந்தால் ஊமை துரையின் காரணமாக மருது சகோதரர்கள் உயிர்விடும் போது பார்வையாளர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். முன்னதாக வந்த காரணத்தாலும் படம் எந்த ஆடம்பரமான பகட்டும் இல்லாமல் வந்ததுமே அதன் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.
வெற்றி தோல்வியை தாண்டி சிவகங்கை சீமை படம் தமிழ்வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற சூழல் மருதுவிற்கு எப்படி உருவாகிறது என்பதை படம் அழகாக சித்தரிக்கிறது.
பெரிய மருது பலமுறை யோசிக்கிறார். கலக்கம் கொள்கிறார். இது தான் ஒருவன் முடிவு எடுக்க வேண்டியது மட்டுமில்லை. தன்னை நம்பிய மக்களின் எதிர்காலம் தொடர்பானது என்று சிந்திக்கிறார். ஆனால் முடிவெடுத்தபிறகு வருவதை தீரத்துடன் எதிர் கொள்கிறார். அதற்காகவே மடிந்து போகிறார். இந்த மனக்கலக்கத்தை பதிவு செய்வதே கலையின் நோக்கங்களில் ஒன்று.
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சிறப்பான இசை, குமாரி கமலாவின் வியப்பான நடனம். தம்புவின் நுட்பமான ஒளிப்பதிவு, கண்ணதாசனின் அற்புதமான பாடல்கள். ‘ வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது’ , ‘ கண்ணங் கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி ‘ , குறிப்பாக தென்றல் வந்து வீசாதோ என்ற எஸ்.வரலட்சுமியின் பாடலில் உள்ள துயரமும ஆதங்கமும் வலியுடையது.
பனை நிரம்பிய நிலவெளி. கற்கோட்டைகள். நாட்டார்மரபிலிருந்து உருவான தாள வாத்தியகருவிகளுடன் கூடிய பாடல் மெட்டுகள். காலம் புரண்டு படுத்தது போல இயல்பாக படமாக்கபட்டுள்ள லாவகம்.
சிவகங்கை சீமை வெளியாகி இந்த ஆண்டோடு 75 ஆண்டுகள் ஆகிறது. இப்போதாவது அதை கொண்டாடி மறுபார்வைக்கு உள்ளாக்கலாமே ?
நன்றி : எழுத்தாளர் – எஸ்.ராமகிருஷ்ணன்.