Close
ஏப்ரல் 28, 2025 12:04 காலை

கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவு : நிதி அமைச்சர் வழங்கினார்..!

கலைஞர் கனவு இல்ல உத்தரவுகளை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

காரியாபட்டி :

காரியாபட்டி ஒன்றியத்தில் ,கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளி களுக்கு வீடு கட்டும் உத்தரவு களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் தலைமை வகித்தார்.

காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 278 பயனாளிகளுக்கு ரூ.9.73 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.31.20 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என, மொத்தம் 291 பயனாளிகளுக்கு ரூ.10.04 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும்,  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி சிறப்புரை யாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு ஏற்று இந்த நான்கு ஆண்டு காலத்தில் மக்கள் நலனுக்காக எத்தனையோ திட்டங்கள் நடை முறை படுத்தி வருகிறோம் . நாட்டு மக்களுக்கு உரித்தான திட்டம், ஏழை எளிய மக்களுக்கான திட்டம், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டம், சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கான திட்டம் என்ற வகையில் பார்த்து பார்த்து இந்த அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.

அந்த வகையில், வெற்றிகரமாக செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டமும். ஒன்றாக சிறந்து விளங்குகிறது. மனிதனாக பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக தேவைகளாக இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம். இந்த இருக்க இருப்பிடம் என்பது இன்றைக்கு பலருக்கும் அது எட்டாக்கனியாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையாக இருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது.
இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை நாம் சட்டமன்றத்திலே அறிவித்து அந்த அறிவிப்பினுடைய ஈரம் காய்வதற்குள், இறுதியான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பணிகளையெல்லாம் செய்வதற்கு முன்பாகவே இந்த அறிவிப்பை அறிவித்த உடனே, இங்கே இருக்கக்கூடிய மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இவ்வாறு பேசினார்.

ஒன்றிய செயலாளர்கள் செல்லம் , கண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட கழகப் பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர சிவசக்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் குருசாமி, கந்தசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கருப்பு ராஜா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மருதுபாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top