வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கிற்கு வாடிப்பட்டியில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடந்த மாதம் அளவீடு செய்தனர்.
அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் தாழ்வாரங்கள் சிமெண்ட் தரைகள், விளம்பர பெயர் பலகைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அகற்றிட கடந்த வாரம் காலக்கெடு கொடுக்கப்பட்டு 16ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப் போவதாக முதல் நாள்ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதனால் இரவோடு இரவாக பல கடைகளில் தாழ்வாரங்களை கடைகாரர்களே அகற்றினர். இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காலை 11:30 மணிக்கு மிகதாமதமாக தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அதன்படி ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டு வந்தனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வேப்ப மரக்கன்று சாலைக்கு இடையூறில்லாமல் இருந்ததைக் கூட வேரோடு பிடுங்கினர்.
மேலும் ஜெமினி பூங்காவில் உயரமாக இருந்த மரக்கொப்புகளையும் பல இடங்களில் சாலையோரம் இருந்த மரக்கிளையின் கொப்புகளையும் முறித்து அப்படியே விட்டுவிட்டனர். இதை கண்ட பொதுமக்கள் சாலையோரம் மரங்களை நடச் செல்லும் நெடுஞ்சாலை துறையினரே மரங்களை வேரோடு சாய்ப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்தனர்.
மேலும் அளவீடு செய்த இடத்தில் அடையாள குறியீடு முழுவதையும் சேதபடுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்நிலையம் முன்பு இருந்த வெற்றிலை பாக்கு கடையின் மேற்கூரையை கடைக்குள் ஆட்கள் இருந்த போதும் ஜேசிபி இயந்திரம் மூலம் சாய்த்தனர்.
அதைக் கண்ட பொதுமக்கள் ஐயோ.. அம்மா என்று அலறினர். அதனால் அங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பணிக்காக 11 மணிக்கு மின் தடை செய்யப்பட்டு 6 மணிக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டது. இதனால் பகல் முழுவதும் வியாபாரிகள் வியர்வையில் அவதி அடைந்தனர். ஆமை வேதத்தில்
மிக கால தாமதத்துடன் நடந்த இந்த பணி பஸ் நிலையம் வரை வருவதற்கு மாலை 6 மணி ஆனதால் பாதியில் நிறுத்தினர்.
இந்த பணியின் போது காலை 9 மணிக்கு வந்து மாலை 6 மணி வரை வந்து காத்திருந்து கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பு பணி செய்த போலீசார் குடிநீர் இன்றி அவதிப்பட்டனர். மீண்டும் இன்று இரண்டாம் நாள் பஸ் நிலையத்திலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது போல் கண் துடைப்புக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அகற்றிய பின் அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரம்பு செய்யாத அளவிற்கு கண்காணிக்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.