விழுப்புரம்:
குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி தாலி சரடு ஏமாற்றி சென்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டத்தூரில் கடந்த 22 ஆம் தேதி குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்வதாக கூறி ஐந்து பவுன் தங்க தாலி சரடு ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மூர்த்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திருவளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி வள்ளியம்மாள் என்பவர் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை தெரிந்து கொண்டு தனது மகன் வல்லரசுவிடம் தகவல் தெரிவித்து, மறுநாள் வல்லரசு அந்த வீட்டிற்கு சென்று சாமிக்கு பரிகாரம் செய்வது போல் நாடகமாடி ஐந்து பவுன் தாலி சரடை கழற்றி வாங்கி ஏமாற்றி தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவளம் கிராம முருகன் மகன் வல்லரசு (வயது -22) முருகன் மனைவி வள்ளியம்மாள்(வயது -46) ஆகியோர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கு சொத்தான ஐந்து பவுன் தங்க தாலி சரடு மற்றும் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.