மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில், குலசேகர பாண்டியமன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன்பின், தினந்தோறும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரங்கள் செய்து சிம்ம,அன்ன,காமதேனு,பட்டுப்பல்லக்ககு, குதிரை, ரிஷபம், யாளிவாகனத்திலும் அருள்பாலித்தார். 8ந்தேதி வியாழக்கிழமை காலை 9.28 மணிக்கு மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு தேர்பவனி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு, காவல் உதவி ஆய்வாளர் திவ்யா தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர் சரஸ்வதி, தலைமைக் காவலர்கள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தத் தேர் பவனியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுந்தரேஸ்வரர் வெண்பட்டும், மீனாட்சி அம்மன் சிவப்பு பாடரில் அரக்கு பச்சை பட்டுடுத்தி அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயிலில் இருந்து 2 கி.மீ.தூரம் வாடிப்பட்டி நகர்புறச் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர் பவனி குலசேகரன்கோட்டை ராமநாயக்கன்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் போடிநாயக்கன்பட்டி வழியாக முக்கிய வீதிகளில் சென்று நள்ளிரவு 3 மணிக்கு கோயிலை அடைந்தது.
இதன் ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் குலசேகரன் கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.10ந்தேதி சனிக்கிழமை இன்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.