Close
மே 11, 2025 3:53 காலை

காஞ்சியில் 30 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று நிராகரிப்பு..!

சோதனை செய்யப்படும் பள்ளி வாகனங்கள்.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் செயல்படும் 30 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று நிராகரிக்கப்பட்டு மீண்டும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்ட சார் ஆட்சியர் ஆஷிக்கலி.

தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளி வாகனங்களினை பராமரிப்பு மேற்கொள்ள அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பல்துறை அலுவலர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு முன்னிலையில் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் 50 பள்ளிகளை சேர்ந்த 356 பள்ளி வாகனங்கள் இன்று வெள்ளை கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் 254 பள்ளி வாகனங்கள் முறையாக அரசு விதிமுறைகளை பின்பற்றி பணிகள் மேற்கொண்டுள்ளதா என சார் ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் 30 வாகனங்களின் தகுதி சான்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு , மீண்டும் அரசு விதிகளின்படி பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அதன் பின் மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர சார் ஆட்சியர் ஆஷிக்அலி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் என சார் ஆட்சியர் ஆஷிக்அலி பேசுகையில், இன்று 254 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டு அரசு விதிகளின்படி அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தற்போது புதியதாக வாங்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும், விதிமுறைகள் முறையாக பின்பற்றி இருந்த நிலையில், ஐந்தாண்டுக்கு மேலான வாகனத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பணிகள் மேற்கொண்டது சற்று முறையாக இல்லாததால், அது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு முப்பது வாகனங்கள் தற்காலிகமாக தகுதி சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை முறையாக மீண்டும் சரி செய்து ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாமும், தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்குழு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ், டிஎஸ்பி சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி, தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட குழுவினர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top