Close
மே 15, 2025 11:37 மணி

சாலையை சீரமைக்க கிராம மக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு..!

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை நீரால் ஆபத்தான நிலைக்கு மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு நீர் குடியிருப்பு பகுதி மற்றும் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் தேங்கி வருகிறது.

சாலையில் கழிவு நீர் தேங்குவதால் சாலை குண்டும் குழியுமாக மாறி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும்,குடியிருப்பு பகுதியில் தேங்கும் சாக்கடை கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலைத்துறையினரிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் தடுப்புகளை அமைத்து தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால், உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top