Close
மே 21, 2025 5:03 காலை

நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!

விவசாயிகளுக்கு நிலையான இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளிக்கும் வேளாண் துணை இயக்குனர் மாலதி. அருகில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை வேளாண் துணை இயக்குனர் மாலதி அறிமுகம் செய்து வைத்தார்.

தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் புலவஞ்சி மற்றும் வேப்பங்குளம் கிராமங்களில் இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை ஊக்குவிக்க பண்ணையில் இயற்கை விவசாயம் மூலம் நுண்ணுயிர்களை உள்ளீடு செய்து அதன் பயன்பாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

பொதுவாக விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களுக்கு வெளிப்புற வியாபாரிகளை சார்ந்திருப்பதை குறைத்தல் மற்றும் இடுபொருள் செலவை குறைத்தல்,மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மற்றும் நிலையான விவசாய முறைகளை கடைப்பிடித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு தஞ்சை மாவட்ட வேளாண்துறை திட்டமிட்டது.

இந்த நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் மாலதி தலைமையில் இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு கொண்டுள்ள 126 விவசாயிகளை ஒருங்கிணைத்து அதன்மூலம் வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்ய விருப்பமுள்ள விவசாயிகளை தேர்வு செய்யும் பொருட்டு இயற்கை வேளாண் திட்ட விளக்கக் கூட்டம் முனைப்பு இயக்கமாக புலவஞ்சி மற்றும் வேப்பங்குளம் கிராமங்களில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வேளாண்மை துணை இயக்குனர் மாலதி விஷமற்ற விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறியதோடு உள்ளூர் இன கால்நடைகளை பராமரித்து அதன் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் மூன்று வருடங்களுக்கு வேளாண் பல்கலைக்கழகம் வேளாண்மை துறை வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளின் அறிவு சார்ந்த விரிவாக்கத் திறன்களை வலுப்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது பற்றியும் எடுத்துக் கூறினார்.

வேப்பங்குளம் மற்றும் புலவஞ்சி கிராம விவசாயிகளுடன் இயற்கை விவசாயத்தை பரவலாக்குவதில் உள்ள நடைமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இயற்கையாக விளைவிக்கப்படும் ரசாயனம் இல்லாத விளைபொருட்களுக்கு விதைச்சான்று துறையின் மூலம் தரநிலைகள் மற்றும் இயற்கை விவசாயம் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது பற்றியும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி எடுத்துக் கூறினார்.

வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் வேளாண் உதவி அலுவலர் ராமு மற்றும் ஜெரால்ட் ஆகியோர் இயற்கை விவசாய பொருட்களுக்கு தேசிய அளவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி விற்பனை ஊக்குவிக்கப்பட உள்ளது பற்றி விளக்கிக் கூறினர். புலவஞ்சி கிராம மகளிர் விவசாயி ஜெகஜோதி மற்றும் வேப்பங்குளத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் ராமதாஸ், ஆகியோர் இயற்கை விவசாய விழிப்புணர்வு முனைப்பு இயக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு கிராமங்களிலும் 126 விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் விருப்பத்தின் அடிப்படையில் ஆன முன்னுரிமையில் பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top