மக்காச்சோள படை புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன சென்சார் இனக்கவர்ச்சிப் பொறி வயலில் நிறுவப்பட்டது.
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி சர்வதேச வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மக்காச்சோள படைப் புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன இனக்கவர்ச்சிப் பொறிகளை ஆய்வுக்காக ஆலங்குடி அருகே உள்ள மரமடக்கி கிராமத்தில் நிறுவியுள்ளது.
இந்த இனக் கவர்ச்சிப் பொறி தற்பொழுது பயன்படுத்தப்படும் இனக்கவர்ச்சிப் பொறியிலிருந்து வேறுபட்டது. இந்த இனக் கவர்ச்சிப் பொறியில் சூரியஒளி மூலம் இயங்கும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு செய்வதற்காக சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள கேபி, வேளாண் விஞ்ஞானிகள் வினோத் பண்டிட், மாளவிகா சவுத்ரி மற்றும் கிருத்திகா ஆகியோர் மரமடக்கி கிராமத்தில் இனக்கவர்ச்சி பொறியின் செயல்பாட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளம் மிக முக்கியமான பயிராகும். மக்காச்சோளம் விதைப்பு செய்த ஒரு வாரம் முதலே அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பரவலாக தென்படுகின்றது.
முறையான பயிர் பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாத போது 80 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தி புழுக்களை கவர்ந்து அழிப்பதன் மூலமாக படைப்புழுக்களின் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க முடியும். இதன் மூலம் பெண் பூச்சிகள் முட்டை இடுவதை தவிர்த்து படைகளின் தாக்குதலை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த முடியும்.
இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், அதிக அளவிலான விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த தடுப்பு முறை விரிவுபடுத்தப்படும் என்றார் ராஜ்குமார்.
இந்த ஆய்வை கள ஆய்வை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் எம். விமலா மற்றும் தொழில்நுட்ப அலுவலர் ஆர். வினோத்கண்ணா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.