டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டத்திற்கு நான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லும் திமுக அரசு, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்கமுடியாமல் சாலையில் எங்கு பார்த்தாலும் கொட்டி வைத்து வீணாகி கொண்டிருப்பது பற்றி யாரும் தமிழக முதல்வருக்கு எடுத்துச் சொல்லவில்லையா? இல்லை காணொளி வாயிலாக பிரசாரம் செய்யும் முதல்வருக்கு, இது போன்ற அவல நிலைகளை பார்க்க முடியவில்லையா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இடையூறு:
திருவாரூர், தஞ்சை, நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில், அதிக அளவு குறுவை நெல் சாகுபடி செய்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு, விவசாயிகள் அதற்குரிய லாபத்தை பெற முடியாமல் வேதனைப்படுகிறார் கள் என்று யாரும் சொல்லவில்லையா?. எத்தகையஇடையூறுக ளுக்கு மத்தியில் விவசாயிகள் சாகுபடி செய்தனர் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
உர விலையேற்றம்:
கொரோனா என்னும் கொடிய நோயின் தாக்கம், வரலாறு காணாத அளவுக்கு பெய்த வடகிழக்கு பருவமழை, வெள்ளம், உர விலையேற்றம் மற்றும் உரத்தட்டுப்பாடு, இடுபொருள் களின் விலையேற்றம், கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்திய ஆன்லைன் பதிவுமுறை போன்ற எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில்தான் விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்தனர். அதிலும், எண்ணற்ற ஏழை விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த குண்டுமணி தங்கத்தையும் அடகு வைத்து, பெற்ற பணத்தை கொண்டுதான், நெல்லை சாகுபடி செய்தனர். அவ்வாறு போராடி விளைவித்த நெல்லையும் இன்று விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
திமுக விளம்பரம்
எனவே, நெல்லை கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பது முறையல்ல, விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து திமுக அரசு விவசாயிகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட வேண்டும். எனவே திமுக அரசு, காலம் தாழ்த்தாமல் போற்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உடனே நெல்லை கொள்முதல் செய்வதுதான் அரசாங்கத்தின் முதல் வேலை. ஆகையால் திமுக அரசு விளம்பரம் செய்வதை விட்டு விட்டு மக்களுக்கு தேவையானதை சரியான தருணத்தில் செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வதற்கு விருப்பமில்லாமல் ஒரு புதிய உத்தியை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளை சுமையாக நினைக்கும் திமுக அரசு:
அதாவது, அரசு அதிகாரிகள் விவசாயிகளிடத்தில் நெற் பயிர்களுக்கு பதிலாக மாற்றுப்பயிரை சாகுபடி செய்யுமாறு ரகசியமாக சொல்லி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்ற டெல்டா மாவட்டத்தில் நெற்பயிர் சாகுபடியை மாற்ற நினைப்பது யாருடைய சிந்தனையில் உதித்தது? என்று தெரியவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக விவசாயிகளை கண் இமை போல காப்பாற்றினார். ஆனால் இந்த திமுக அரசோ, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஒரு சுமையாக இருப்பதாக தான் தமிழக மக்கள் கருதுகின்றனர்
டெல்டா மக்களின் எதிர்பார்ப்பு:
திமுக அரசு இருக்கும் வரை விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் அமையும். இது போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற செயல்களை தமிழக மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விளைவித்த நெல்லை விரைந்து கொள்முதல் செய்திட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்