Close
செப்டம்பர் 20, 2024 7:06 காலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 23 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை- ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளில் உள்ள 278 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள், அதுபோன்று மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி நகராட்சிக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இரு மையங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள்  22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படவுள்ளது.

புதுக்கோட்டை
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள்

இதற்கென புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புதுக்கோட்டை நகராட்சிக்கு 10 மேஜைகளும், 8 பேரூராட்சி களுக்கு 8 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அறந்தாங்கி நகராட்சிக்கு 5 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு மையங்களிலும் மொத்தம் 23 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணுகை நேர்மையாகவும், நியாயமாகவும் நடப்பதை கண்காணிக்கவும், உறுதி செய்யவும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படியும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திட வட்டார பார்வையாளர்களாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறையைச் சேர்ந்த துணை ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக வாக்கு எண்ணிக்கையை ஒவ்வொரு மேஜையிலும் கண்காணித்திட பொதுத்துறை வங்கி நிறுவன ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மையத்தில் அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவ்வப்போது பொதுமக்கள் அறிந்துகொள்ள எதுவாக ஒலிபெருக்கி பொருத்தி அறிவிப்பு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top