Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு அவர் பிறந்த புதுக்கோட்டையில் பொது இடத்தில் உருவச்சிலை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை

நாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமிரெட்டிக்கு அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் வளாகங்களைத் தவிர்த்துவிட்டு பொது இடத்தில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென மகளிர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப்பணியில் ஈடுபட்ட மாதர் குல மாணிக்கங்கள் தமிழகத்தில் மிகச்சிலரே. அந்த மிகச் சிலரில் தலையாய இடம் பெறும் தகுதி பெற்றவர் ஒருவர் உண்டென்றால் அவர் டாக்டர்முத்துலெட்சுமிரெட்டி என்றால் மிகையில்லை.
கடந்த 30.7.1886 -ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப்பிறந்தார் முத்துலெட்சுமி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்த காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளி தொடங்கிய தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலெட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார்.

ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை, உள்ளூர் கல்லூரியிலோ பெண்களை சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது. இச்சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர கடந்த 4.2.1904 -ல் விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில் சில பழமைவாதிகள் இதை கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு முத்துலெட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

1907 -இல் சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலெட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சான்றிதழ்களும், தங்கப்பதக் கங்களும் பெற்று 1912 -இல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமை பெற்றார்.
சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகனான மருத்துவர் சுந்தரரெட்டியை 1914 -இல் திருமணம் செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து மருத்துவ தம்பதியர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினர்.

விடுதலைப் போராட்டத்திலும், மகளிர் உரிமைக்கான இயக்கங்களிலும் முத்துலெட்சுமிரெட்டி ஈடுபாடு கொண்டார். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இவருக்கு உறுதுணை யாக நின்றார்.

1929 -இல் இந்திய மாதர் சங்கம் பெண்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென போராடியதன் விளைவாக முத்துலெட்சுமிரெட்டி சென்னை சட்டசபையின் உறுப்பினரானார். துணைத்தலைவராகவும் ஆனார். சட்டசபையில் நுழைந்த முதல் பெண்மணியும், உலகிலேயே சட்டசபையின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.
சமுதாயத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயில்களில் தேவதாசிகள் என்ற பெயரில் இழிவு படுத்தப்படுவதை தடை செய்யும் சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றினார். பால்ய விவாக தடைச்சட்டம், பாலியல் தொழில் தடைச்சட்டம் கொண்டுவர இவர் பெரும் முயற்சி எடுத்தார்.

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் கடந்த 1930 -இல் அவ்வை இல்லத்தை நிறுவினார். புற்று நோய் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1936 -இல் மாபெரும் இயக்கத்தை நடத்தி இதற்கென தனி மருத்துவமனையை அமைக்க வேண்டுமென முயன்று சென்னை அடையாறி்ல் கடந்த 1954 -இல் புற்று நோய் மருத்துமனையை தொடங்கினார்.

இன்று ஆசியாவிலேயே புகழ்மிக்க புற்றுநோய் மருத்துவமனயாக அது திகழ்கிறது. அவ்வை இல்லமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மனித இனத்துக்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து.

புதுக்கோட்டை
புதுகையிலுள்ள தனியார் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உருவச்சிலை

மனிதகுலத்துக்கு பல்வேறு சேவைகள் புரிந்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரின் திருவுருவச் சிலையானது கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் சிலை அமைப்புக் குழுவினரால், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீன வளாகத்தில் (தனியார்இடம்) புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலை அருகே நிறுவப்பட்டு, அன்றைய துணை முதல்வரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 30.07.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், சிந்தனை, மூச்சு, செயல் அனைத்தையும் பெண்கள் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்த டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி பிறந்த பெருமை பெற்ற புதுக்கோட் டையில் பொது இடத்தில் அவரது உருவச்சிலையும் மணி மண்டபமும் இல்லாததது பெருங்குறையாகவே பெண்கள் சமுதாயம் கருதும் நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த 7.9.2021 -ல் நடந்த சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின், விடுதலை வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், இலக்கியப் படைப்பாளிகள், திராவிட இயக்க முன்னோடிகளுக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்தார் . அதன்படி, தமிழறிஞர் மு. வரதராசனா ருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை; சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப. சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும் கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.

மேலும், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் மாமன்னர் மருது சகோதரர்கள்  மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்  சிலை. அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை; மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் சிலை; அண்ணா பல்கலை.யில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை; ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியில் சிலை; நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை; பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்

அதன்படி, புதுக்கோட்டை நகரில் முத்துலெட்சுமி அம்மையாருக்கு உருவச்சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உருவச்சிலை அமைக்க பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.நாட்டுக்கு பெருமை சேர்த்த பெண்மணியை ஒரு வளாகத்துக்குள் சுருக்கி விடாமல் பொது வெளியில் வைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

புதுக்கோட்டை
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உருவச்சிலை இந்த இடத்தில் அமைக்கப்படுமா

புதுக்கோட்டை திருச்சி செல்லும் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி எதிர்புறத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் ரூ.10 கோடியில் கட்டப்படும் எக்கோ பார்க் -இன் மேற்கு பகுதியில் உள்ள இடத்தை மணி மண்டபத்துடன் முத்துலட்சுமி ரெட்டிக்கு அம்மையாருக்கு சிலை அமைக்க வேண்டும். அப்போதுதான் கல்லூரிக்கு தினமும் வந்து செல்லும் சுமார் 3 ஆயிரம் மாணவிகளுக்கு பெரிய உந்து சக்தியாக இந்தச்சிலை திகழும்( பார்க்கப்படும்) என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்தசந்திரசேகன் கூறியது: சங்க கால புரட்சிப்பெண் கண்ணகிக்கு சிலை எடுத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது வழிவந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் , நவீன காலத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண் டாக்டர்முத்துலெட்சுமிரெட்டிக்கு பொது இடத்தில் மணிமண்டபத்துடன் உருவச்சிலை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும். வரும்ஜூலை-30 -ம் தேதி அவரது பிறந்தநாள் வரும் வேளையில், டாக்டர்முத்துலெட்சுமி ரெட்டியின் உருவச்சிலையை நிறுவுவதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்து அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

புதுக்கோட்டை நகராட்சியைப் பொருத்தவரை ஏற்கெனவே 32 பூங்காக்கள் நகர் முழுவதும் இருக்கின்றன. அவற்றின் தற்போதைய நிலையைப் பார்க்கும் அனைவருமே வேதனைப்படும் வகையில் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இச்சூழலில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பொது மைதானமாக இருந்த பகுதியில் தேவையற்ற வகையில் தனிப்பட்ட சிலரின் விருப்பத்துக்காக சுமார் ரூ.10 கோடி செலவில் அங்கு ஏதோ ஒரு பெயரில் அமைக்கப்படும் பூங்காவும் எவருக்கும் பயனளிக்கப் போவதில்லை. எனவே, மாவட்டத்தில் உள்ள 2 அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர், எம்எல்ஏ ஆகியோர் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் கனவுத்திட்டமான புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை வெகு இலகுவாக மருத்துவமனை யாக எப்படி மாற்றினார்கள் என்பதையும் நினைவில் வைத்து, இந்த இடத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தி, டாக்டர் முத்துலெட்சுமிரெட்டிக்கு மணி மண்டபத்துடன் உருவச்சிலை, சீரணி அரங்கம் போல பொது நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாகவும், கிழக்குப்பகுதியின் ஓரம் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற மாற்றங்களைச்செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி கால கட்டத்தில் புதுக்கோட்டையில் உள்ள முக்கிய இடங்கள் (ஆபீசர்ஸ் கிளப்) லீஸ் என்ற பெயரில் தாரைவார்க்கப் பட்டதையும் கவனத்தில் கொண்டு, அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் பொது மக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top