Close
செப்டம்பர் 20, 2024 5:54 காலை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்த குடவோலை தேர்தல் முறை

குடவோலை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்த குடவோலை தேர்தல் முறை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அற்புதத் தேர்தல் முறையை நடத்தி அழகிய தீர்வு தந்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

அதுதான் குடவோலை தேர்தல் முறை அந்த தேர்தல் முறையில் உள்ள பல நல்ல அம்சங்கள் இன்றைய பல தேர்தல் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது.

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் ஆரவாரமின்றி அமைதியாய் இதற்க்கு சாட்சியாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுகள்.
பொதுவாக கோயிலில் சுவற்றின் ஒரு பகுதியில் சில கல்வெட்டுக்கள் இருக்கும் ஆனால் கோவிலின் மூன்று பக்க சுவர் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பி நிற்கிறது இந்த அரசியல் ஆவணங்கள்.
கிபி 759 முதல் 1250 வரை தொடர்ந்து 500 ஆண்டுகள் இந்த ஊரை நிர்வாகம் செய்த வரவு செலவு கணக்குகள்.ஊரை நிர்வகிக்க நடந்த குடவோலை தேர்தல் முறை கல்வெட்டுகள் உள்ளன. இந்தத் தேர்தல் முறையில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வில்லை என்றாலும் குடவோலை தேர்தல் முறை அதில் உள்ள வேட்பாளரின் தகுதிகள் தகுதிஇன்மைகள் இவற்றின் முழு விவரமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.

வேட்பாளரின் தகுதிகள்
தேர்தலில் நிற்பவர் 35 வயதிற்கு மேல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும் வயது என்பது வாழ்வின் அனுபவ முதிர்ச்சி அளிக்கிறது எனவே இது நிர்வாகத் திறமைக்கு வலுசேர்க்கும் என்பதால் இந்த தகுதியை வைத்து இருக்கிறார்கள். இன்று 21 வயதுமுதல் 90 வயது வாழ்நாள்வரை தாங்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டு அடுத்த தலைமுறைக்கு நிர்வாகத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் இருப்பதை இது தடுக்கிறது..

இரண்டாவது தகுதியாக வேட்பாளர் தன்மனையிலேயே வீடுகட்டி வசிப்பவராகவும் கால்வேலி நிலமாவது உடையவராகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.  இதன் பொருள் ஊர் பொது நிலங்களையோ புறம்போக்கு நிலங்களையோ பிறர்மனை களையோ ஆக்கிரமித்து அபகரித்து உள்ளவன் தகுதியற்றவன் என்பதாகும். ஆனால் இன்று சிலர் ஊர் பொது சொத்தை ஆக்கிரமித்து கபளீகரம் செய்வதவர்கள் வேட்பாளர்களாக இருப்பதை நாம் அறிவோம்.

மூன்றாவது தகுதியாக ஒரு குறிப்பிட்ட கல்வித்தகுதியில் தேர்ச்சி உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்பதாகும் ஏனெனில் பொது மக்களின் வாழ்வை பாதிக்காமல் அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் சட்டதிட்டங்களை இயற்ற இது வழிவகை செய்கிறது. ஆனால் இன்றைய வேட்பாளர்களின் தகுதிகள் என்ன என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக ஊரறிந்த விஷயமாக உள்ளது.

தகுதியற்ற வேட்பாளர்கள்:
கடந்த முறை தேர்தலில் வென்று கணக்கு காட்டாத இருப்பவர்கள்.கையூட்டு (இலஞ்சம்) பெற்றவர்கள்.இவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை மற்றும் இவர்க ளின் குடும்பத்தினர் மற்றும் தந்தைவழி உறவினர்கள் தாய்வழி உறவினர்கள் இவர்களுக்கு பிள்ளை கொடுத்தவர் களின் குடும்பத்தினர் இவர்கள் மனைவியின் உறவினர்கள் இவர்கள் ஏழேழு தலைமுறைக்கும் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள். இதன் மூலம் ஊழல் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
.ஆனால் இன்று தேர்தலில் வென்று அதிகாரத்தில் இருக்கும் பொழுது நேர்மையற்ற வழியில் கோடி கோடியாய் கொள்ளையடித்த பணம் சம்பாதித்து விட்டு பிடிபட்டால், தன் மகனையோ தன் மனைவியையோ மச்சானையோ தனக்கு பதிலாக வேட்பாளராக நிறுத்தி மீண்டும் ஊழலுக்கும் வித்திடும் வகையில் இன்றைய தேர்தல் முறை உள்ளது.

அதேபோல் பிறர் பொருளை அபகரித்தல் பிறர் மனையை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டோர் குடும்பத்தினர் இவர்களது சொந்த பந்தங்கள் யாராக இருந்தாலும் ஏழேழு ஜென்மத்திற்கும் தேர்தலில் நிற்க முடியாது அதுமட்டுமல்ல இந்த நேர்மையற்ற செயலுக்கு துணை போனவர்களும் தேர்தலில் நிற்க முடியாது என்று அன்று விதிமுறை வகுத்திருந்தார்கள்

அதேபோல ஒரு தவறு செய்து அதற்கு பிராயசித்தம் செய்தவர்களும் தேர்தலில் நிற்க முடியாது அது மட்டுமல்லாது பிராயச்சித்தம் செய்து வைத்தவனும் தேர்தலில் நிற்க முடியாது என்று விதிமுறை உள்ளது ஆனால் இன்று என்ன நிலைமை.

மேலும் ஊருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவன். அவன் பெயர் கிராம கண்டகன் என்பதாகும். ஊருக்கு முள்போல் இருப்பவன் என்று பொருள் இவனும் தேர்தலில் நிற்க முடியாது என்று விதிமுறை உள்ளது .அதாவது இந்த காலத்தில் ரவுடி தாதா குற்ற செயல் புரிவோர் என்று பொருள் கொள்ளலாம்.
இதுபோன்றோரிடத்தில் ஊரை நிர்வகிக்கும் அதிகாரம் இருந்தால் ஊர் பாழாகும் என்றும் இவர்களிடம் எப்படி நீதி நேர்மை சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்க்க இயலும் என்று இந்த விதிமுறையை வகுத்திருக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

ஆனால் இன்று பல அரசியல் கட்சிகளில் குற்ற செயல் புரிவோருக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளர் ஆக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் நமக்கு தருகிறது.
மேலும் ஒருமுறை தேர்தலில் நின்று அவர்கள் அடுத்து வரும் மூன்று தேர்தலில் நிற்க முடியாது.

அவர்களது குடும்பத்தினரும் நிற்க முடியாது அடுத்த மூன்று தேர்தலுக்குப் பிறகுதான் தேர்தலில் நிற்க இயலும் என்கிற விதிமுறை உள்ளது. இதன் பொருள் ஒருவன் தன் வாழ்நாள் முழுமைக்கும் தானே தேர்தலில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு வழிவிடாமல் இருப்பதை இது தடை செய்கிறது.
ஆனால் இன்று ஒரு முறை நின்று வென்றால் அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தன்னால் தன் வாழ்நாள் முழுவதும் தானும் தனது மகன் மகள் மனைவி பிள்ளைகள் சொந்த பந்தங்கள் உறவினர்கள் என ஒரே குடும்ப ஆட்சிமுறை வாரிசு அரசியல் முறை வேரூன்றி உள்ளது. அதனால் இதை தடைசெய்து அதிகாரம் பரவலாக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அன்றைய தேர்தல் விதிமுறைகள் இருந்துள்ளது.அதற்காக அதை அப்படியே நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை..
அன்றைய முடியாட்சி முறையிலேயே இப்படியான தேர்தல் முறை இருந்துள்ளது ஆனால் இன்றைய குடியாட்சி முறையில் என்ன நிலைமை.
அன்றைய குடவோலை தேர்தல் முறையில் சிலவற்றில் இப்போது முரண்பாடு இருக்கலாம் அதை எல்லாம் கலைந்து அதில் உள்ள பல நல்ல விஷயங்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு நாம் நம் தேர்தல் முறையை உருவாக்கினால் உண்மையான தேர்தல் நேர்மையான தேர்தல் நடக்கும் உள்ளாட்சியில் நல்லாட்சி மலரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top