Close
நவம்பர் 23, 2024 12:19 மணி

மருத்துவம் பயில உக்ரைனுக்கு ஏன் செல்கிறார்கள்… மத்திய அரசு ஆராயவேண்டும்..

உக்ரைன்

உக்ரைன் மருத்துவம் படிக்க ஏன் செல்கிறார்கள்

 இந்திய மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில வெளிநாடு செல்லும் காரணிகளை மத்திய அரசு ஆராய வேண்டும்.

உக்ரேன் ரஷியா யுத்தத்தில் கர்நாடகாவை சேர்ந்த உக்ரேன் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் நவீன் சேகரப்பா எனும் மாணவர் மரணம்.  அதிர்ச்சியும் சோகமும் நம்மை தொற்றிகொண்டதொடு அந்த மாணவரை பற்றிய விபரங்கள் அறியும்போது இன்னும் வருத்தம் சூழ்ந்துகொண்டது.

கர்நாடக மாநில தேர்வில் 97% மதிப்பெண்களை பெற்றவர். ஆனால் அவருக்கு இங்கே மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு நீட் வந்ததால் இழந்தவர்.  அதே வேளையில் உக்ரேன் சென்று தனது மருத்துவக்கனவை நனவாக்க முயன்று அங்கே நடந்த உள்நாட்டு போரில் பலியானார்.

நம் இந்திய நாட்டை சேர்ந்த 20,000 மாணவர்கள் உக்ரேனில் படித்து வருகிறார்கள்.  அந்த மாணவர்களை மீட்டு கொண்டு வரும் பணிகளில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதமும் இந்த மாணவனை நாம் இழந்து இருக்கிறோம்.  இந்த மாணவனின் இழப்பிற்கு அடிப்படை காரணம் நீட் இந்த பாஜக தலைமையிலான ஒன்றிய அரசும் தான்.

உலகத்தில் இருக்கும் பல்வேறு நாடுகள் போர் சூழும் சூழலை உணர்ந்து அவர்கள் நாட்டு குடிமக்களை காப்பாற்றி மீட்டு கொண்டு வந்து சேர்த்த நிலையில், போர் நிகழும் நாட்டிற்கு நமது விமானங்களை விரைந்து அனுப்பி மாணவர்களை மீட்டு கொண்டு வருவதில் ஏகப்பட்ட குழப்பங்களோடு தான் இந்த அரசாங்கம் நடந்து கொண்டு இருக்கிறது

உக்ரேன் நாட்டில் நமது இந்திய அரசின் விமான உதவிக்காக காத்திருக்கும் மாணவர்களை பற்றி குறிப்பிடாமல் மறைமுகமாக பிரதமர் மோடி  சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் பற்றிய காணொளி கூட்டத்தில் சிறிய நாடுகளுக்கு மருத்துவம் படிப்பதற்காக நம் மாணவர்கள் செல்கிறார்கள். இதனால் இந்தியாவின் சொத்துகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது.

மாநில அரசுகள் மருத்துவக் கல்விக்காக நில ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை வகுக்க வேண்டும்.  தனியார் துறையும் இதற்காக மிகப்பெரிய அளவில் முன்வரவேண்டும், இதன் மூலம் உலகளாவிய தேவையைக் கூட நிறைவேற்ற இந்தியா அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை வழங்க முடியும் என்று கூறியது. உண்மையாக நமது பிரதமருக்கு எதற்காக மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க செல்கிறார்கள்? என்ற குறைந்த பட்ச அடிப்படை காரணத்தை கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

பிரதமர்  இங்கே இடம் தான் பிரச்னை என்றால், மதுரை போன்ற பல்வேறு நகரங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒரே ஒரு செங்கல் மட்டும் வைத்துவிட்டு அடுத்த செங்கலுக்காக காத்திருப்பது எதற்காக என்பதை புரிவீர்களா?

 நீங்கள் 14 ஆண்டுகள் முதலமைச்சராகவும் எட்டு ஆண்டுகள் இந்திய பிரதமராக இருந்தும் கூட அடிப்படை காரணிகளை புரியாமல் மக்களிடமும் மாணவர்களிடமும் இருந்தும் அன்னியப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை சாமானியன் புரிந்துகொள்வான்.

நீலி கண்ணீர் வேண்டாம், யாரோ ஒருவர் எழுதி க்கொடுப்பதை டெலிப்ராம்ப்டர்லே ஏற்றி அதில் வருவதை தேர்தல் பிரசாரங்களை போன்று உளறிவிட்டு செல்வதை விட்டுவிட்டு உண்மையான அடிப்படை காரணிகளை ஆராய்ந்து அதை பற்றி சிந்தித்து பரிசீலித்தால் மட்டுமே நம்மால் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவர்களை உருவாக்க முடிவதோடு உக்ரேன் பிலிப்பைன்ஸ் நெதர்லாந்து சீனா, ரஷ்யா என்று ஆங்கிலம் அல்லாத மாற்று மொழி நாடுகளுக்கு சென்று ஓராண்டுகள் அந்த மொழியை கற்று அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் மருத்துவக்கல்வியை மொத்தத்தில் ஆறாண்டுகள் படித்துவிட்டு இந்தியாவில் நடக்கும் இந்திய மருத்துவக்கழகத்தில் மீண்டும் ஒரு பரீட்சை எழுதி மருத்துவராகும் மாணவர்களுக்கு இந்தியாவிலேயே மாற்று வழிகள் காண முடியும்.

எதற்காக மருத்துவம் படிக்க மாணவர்கள் வெளிநாடுகள் செல்கிறார்கள் என்று நாம் அலசி ஆராய்ந்தோம் என்றால் அவற்றில் கீழ்க்கண்ட காரணங்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

NEET தேர்வு முறை:

இந்திய பாராளுமன்றத்தில் 10-12-2021 அன்று வைக்கப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் மொத்த MBBS இடங்கள் 88,120.   (இன்றைய தின இந்திய மருத்துவ கழகம் www.nmc.org.in  இணைய தள நிலவரத்தின் படி இந்தியா முழுமைக்கும் 605 மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் MBBS படிப்புக்கான இடங்கள் வெறும் மூலம் 90,825)  இந்த இடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் 15.44 மாணவர்கள் NEET தேர்வு எழுதி 8.70 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அரசு கல்லூரிகளில் இருக்கும் MBBS இடங்கள் – 46,860, தனியார் கல்லூரிகளில் இருக்கும் 50% இடங்கள்  – 21,983 மொத்தம்   68,843

இவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் படிக்க முடியும்.  தனியார் கல்லூரிகளில் இருக்கும் மீதம் இருக்கும் 50% இடங்கள்  21,983. இந்த இடங்களுக்கு இந்தியா முழுவதும் NEET தேர்வெழுதி தேர்சசி பெற்று மேலே சொன்ன 69,843 இடங்களில் வராத எட்டு லட்சம் பேர் போட்டியிடு கிறார் கள்.

போட்டி:இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகள் மிகக்குறைவாக இருப்பதாலும், அதிலேயும் ஏறக்குறைய 25% இடங்களுக்காக (21,983 இடங்கள்) அதற்கு எட்டு லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.
கல்வி முறை:இந்தியாவில் பொறியியல் படிக்கும் மாணவர் களுக்கு LATERAL ENTRY எனும் முறை உண்டு.  உதாரணமாக 10ஆம் வகுப்பிற்கு பின்னர் POLYTECHNIC லே DIPLOMA 3 ஆண்டுகள் படித்துவிட்டு பொறியியல் பட்டத்திற்கு இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளும் வசதிகள் உண்டு.  ஆனால் MBBS படிப்பிற்கு அப்படி வசதிகள் இல்லை.

கனடா, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளில் MBBS படிப்பிற்கு இடம் கிடைக்காதவர்கள் மருத்துவம் சார்ந்த B.Sc  (NURSING) போன்ற படிப்புக்களை தேர்வு செய்து படிக்கிறார்கள்.  படிக்கும்போது பணியாற்றுகிறார்கள்.  அதன் பின்னர் MBBS நான்காம் ஆண்டில் சேர்ந்து இரண்டாண்டுகள் படித்து MBBS பட்டம் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.    இப்படியான LATERAL ENTRY முறைகளை மேலை நாடுகள் அனுமதிப்பதால் வெளிநாடு சென்று MBBS படிக்க முனைகிறார்கள்.

கல்லூரி கட்டணங்கள்: 

இந்தியாவில் இப்போது GOVERNMENT QUOTA வில் குறிப்பாக 68,843 மாணவர்களுக்கு மட்டுமே அரசு நிர்ணயிக்கும் வருடாந்திர கட்டணம்.  மீதி இருக்கும் 21,983 NEET தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கு வருடாந்திர கட்டணமாக ரூ.23 லட்சம் வரை TUTION FEE பெறுவதற்கும், HOSTEL FEE மற்றும் CAPITATION FEE பெறுவதற்கும் எந்த வித உச்ச வரம்பும் நிர்ணயிக்கப்படாத தால்.. குறைந்த பட்சம் MBBS படிக்க ஒரு கோடி இருந்தால் மட்டுமே படித்துவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதே வேளையில் உக்ரேன், சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வருடம் 3 லட்சம் முதல் 5 லட்சம் செலவில் ஆறு ஆண்டுகள் MBBS படிப்பை 20 முதல் 25 லட்சத்தில் படித்து விட்டு வர முடிகிறது.  அதோடு அந்த படிப்பு காலங்களில் ஒய்வு நேரங்களில் பணியாற்றி வருமானம் ஈட்டிக்கொண்டே படிப்பதற்கும் சில நாடுகளில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஆகவே நம் நாட்டில் இருக்கும் ஏழை மாணவர்கள் நீட் தேர்வினால் தேர்ச்சி பெற்றாலும் இங்கே இருக்கும் குறைவான இடங்களுக்கான போட்டிகள் மூலம் பணபலம் பெற்ற பணக்காரர்களால் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடிகிறது,  அதோடு அந்த செலவுகளை செய்து படித்த மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் சேவை செய்யாமல் அதை வியாபார மனப்பான்மையோடு நடந்துகொள்ள இந்திய நடைமுறைகளும் நீட் போன்ற தேர்வு அவலங்களும் இடம் அளிக்கிறது.

கடும் குளிரிலும் மாறுபட்ட மொழியிலும் சமாளித்து வெளி நாடுகளில் மருத்துவம் படிப்பதற்கு மேலே சொன்ன காரணங்கள் இருப்பதை மத்திய அரசும் பிரதமரும் உணர வேண்டும். இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நிதி ஆதாரம் இல்லாத இந்த மாணவர்களா இந்திய செல்வங்களை எடுத்து சென்று வெளி நாடுகளில் படிக்கிறார்கள்?

உண்மையாக மருத்துவம் படிப்பதற்கு NEET எழுதிய வருடம் 15 லட்சம் பேர் தயாராக இருக்க அதில் 7% பேர் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கி இருக்கும் NEET முறையை நீக்கவேண்டும்.  LATERAL ENTRY முறையை கொண்டு வரவேண்டும்.

இன்னும் நிறைய அரசு கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்.  இவற்றை எல்லாம் செய்வதற்கு கல்வி ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதை கொஞ்சம் உணர்ந்து விட்டு மாநில அரசுகள் நிலங்களை தனியாருக்கு ஒதுக்கவேண்டும் என்றும் தனியார்கள் கல்லூரிகளை ஏற்படுத்தவேண்டும் என்று கூறுவது. ஆட்சியில் அமர வைத்த தனியார்களுக்கு மறைமுகமாக வாய்ப்புகளை ஏற்படுத்து கொடுக்க முயல்வது போல இருக்கிறது.  வெளிநாடு சென்று படிப்போர்களுக்கு வெளிநாட்டில் வாங்கும் கட்டணத்தில் இங்கே படிப்பதற்கு ஏற்படுத்தி தர   பிரதமர் தயாராக வேண்டும் .

> ஆர்.எம்.பாபு, தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரை (9600276131).

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top