Close
நவம்பர் 22, 2024 6:10 காலை

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த யோசித்து வரும் மத்திய அரசுயோசனை

அரசியல்

முதலமைச்சர் ஸ்டாலின்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

நாடு முழுதும் முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவது குறித்து, ஸ்டாலினிடம் பேச மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த, பிரதமர் மோடி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.  அண்மையில்  நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ள நிலையில்,  நாடு முழுதும் ஒரே தேர்தல் நடத்த தயார் என, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரும், வரும் 2024ம் ஆண்டில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் வரும் என பேசி வருகின்றனர்.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்றவர்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கின்றனர். லோக்சபாவில், இதற்கான சட்டத்திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தாலே வெற்றி பெற்று விடும்.

ராஜ்யசபாவில் வெற்றி பெறுவதற்கு போதுமான எம்.பி.,க்கள் இல்லை என்பதால், அத்திட்டத்தை நிறைவேற்றுவது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துடன், நேரடி முதல்வர் தேர்தலையும் கொண்டு வந்தால், எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வாய்ப்பு உள்ளது என, அமித்ஷா தலைமையிலான அரசியல் விவகாரக் குழு கணக்கு போடுகிறது.

அக்குழு பிரதிநிதிகள், சமீபத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் கருத்து கேட்டுள்ளனர்.  அவர்களும் இசைவு தெரிவித்துள்ளனர். ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

விரைவில் முதல்வர்கள் ஸ்டாலின், மம்தாவிடம் கருத்து கேட்க, அக்குழு முடிவு செய்துள்ளது. இருவரிடமும் பேசிய பின், தேசிய அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும். அதில், நேரடி முதல்வர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top