நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (20.03.2022) கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு ஏற்படும் புற்றுநோய் போன்ற அதிக பாதிப்புள்ள பெருநோய்களை இம்முகாம்களின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மேலும் இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் பொதுமக்களுக்கு, குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களுக்கும் உயர்தரத்திலான சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு மருத்துவ நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மேலும் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற மக்களை பாதிக்கும் எவ்வித திட்டங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இம்முகாமில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஊராட்சிமன்றத் தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.