புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்(83) கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்திடமிருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 21.3.2022 -இல் வழங்கினார்.
ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சிவில் விழா குடியரசுத் தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28- ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022- ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது பட்டியலில் 34 பேர் பெண்கள் மற்றும் 13 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது:
கலை பிரிவின் கீழ் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, எஸ்.பல்லேஷ் பஜந்திரி, சதிர் நடனக் கலைஞர் ஆர்.முத்து கண்ணம்மாள், நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் மற்றும் கல்வி பிரிவின் கீழ் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கும், மருத்துவ பிரிவின் கீழ் டாக்டர் வீராச்சாமி சேஷய்யாவிற்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது. சிறந்த சமூக சேவைக்கான பத்ம ஸ்ரீ எஸ்.தாமோதரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞரான கொங்கம்பட்டு ஏ.வி.முருகையன் என்பவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.