Close
நவம்பர் 22, 2024 2:58 மணி

கவிதைப்பக்கம்… மண்: மருத்துவர் மு.பெரியசாமி

மண்

மண்- கவிதை

மண்…

தங்கமும் நானே
தகரமும் நானே
இரும்பும் நானே
துரும்பும் நானே
கல்லும் நானே
கடவுளும் நானே!!!

கங்கை ஓடுவதும்
கடல் ஆடுவதும்
காற்று வீசுவதும் என்னால்!
காலங்கள் மாறுவதும்
காட்சிகள் மாறுவதும்
என்னால்!

என்னை
பாத்திரமாக மாற்றலாம்
பத்திரம் போட்டு சேர்க்கலாம்
பாயாக நீட்டலாம்
பளிங்கு மாளிகையாக கட்டலாம்,
கூடாக பின்னலாம்
குகையாகவும் குடையலாம்!

பசி வந்தால்
ஏந்தும்
பாத்திரம் நான்,
பண்பாட்டு சின்னத்தின்
சூத்திரம் நான்,
பல்லுயிர்களை ஆக்கும்
அட்சயம் நான்,
பட்டியும் நான்
நாகரீக தொட்டிலும் நான்!!

உயிர்கள்
என் உடைமை,
உயிர் வாழும் வரை மட்டுமே
எனக்கு இந்த உரிமை..!
ஒற்றுமையாய் வாழ்வது
எனக்குப்பெருமை
உயிருக்குப் பின்…
உடல் எனதாகும் என்பதே
உண்மை!

எனக்கு
வாசம் உண்டு
வஞ்சனை கிடையாது
என் ,நிறம் மாறுவதுண்டு
ஆனால் என்றும்
என்நிசம் ,நேசம் மாறுவதில்லை

என் மீது
வளரவேண்டும் என்ற
ஆசை!
என்னை
வாங்க வேண்டும் என்ற
ஆசை!
என்மீது
வாழவேண்டும் என்ற
ஆசை!
என்னை
ஆள வேண்டும் என்ற
ஆசை!
அனைவருக்கும் உண்டு!!

என்னை
வெட்டினாலும்
கொத்தினாலும்
வெடிவைத்து தகர்த்தாலும்
விலை பேசி விற்றாலும்
உங்களை
நான் தாங்குவேன்
உங்களுக்காகவே
என்றும் ஏங்குவேன்
நான்
தாய்மண்!

ஆக்கம்: மருத்துவர் மு.பெரியசாமி,புதுக்கோட்டை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top