மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களை பாதுகாப்போம்! பொதுத்துறைகளை பாதுகாப்போம்!! மார்ச்28,29 வேலைநிறுத்தத்தை விளக்கி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கத்தினர் தஞ்சையில் இன்றுபிரச்சாரம்.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக தொமுச ,சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து சங்க நிர்வாகிகள் இன்று மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகம் மற்றும் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொது மக்களிடமும், வணிகர்களிடமும், தொழிலாளர்களிடமும் மார்ச் 28 ,29 தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரச்சாரத்தில் அனைத்து மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இரவுபகலாக அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, குறைந்த கட்டணம், மாணவர்கள், பெண்களுக்கு இலவச பயணம் என்றுதமிழ் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பான சேவையை அளித்து 50 ஆண்டு பொன் விழாவை கண்டுள்ளது.
ஒன்றிய மோடி அரசாங்கத்தின் தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலைபாடு களால் போக்குவரத்து கழகம் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது, மாநில,தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார், கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது ,தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டத் திருத்தம், தேசிய சாலை போக்குவரத்து சட்டம் ஆகிய சட்டங்களினால் அரசு போக்குவரத்து கழகங்கள் சீரழிவுக்கு உள்ளாகி வரும் நிலை உருவாகியுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும், வங்கி, மின்சாரம் ,இன்சூரன்ஸ், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், பிஎச்இஎல் உள்ளிட்ட மத்திய ,மாநில பொதுத்துறை நிறுவனங்களையும், அதற்குரிய நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று பணமாக்கும் தேசிய பணமாக்கல் கொள்கையை கண்டித்தும்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் அன்றாடம் உழைக்கின்ற ஏழை, எளிய]மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்படைந்து உள்ளதையும், சிறு,குறு தொழில்கள் சீர்குலைந்து நாட்டின் பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளதையும்.
விவசாயிகளின் பிரதான கோரிக்கையான ஆதார விலை நிர்ணயம் கோரிக்கைகளில் ஒன்றிய அரசின் விரோத போக்குகளைக் கண்டித்து வருகின்ற 28 ,29 தேதிகளில் தேசிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும், வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பொதுமக்கள் இரண்டு நாள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும், வணிகர்கள் கடைகளை அடைத்து உதவிட வேண்டும், தொழிலாளர்கள் முழுமையாக வேலைநிறுத்தத் தில் பங்கேற்க வேண்டும் என்று பிரசாரம் செய்து துண்டறிக்கை அளிக்கப்பட்டது.
இந்த பிரசாரத்திற்கு தஞ்சாவூர்அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளைசெயலாளர் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியூ சங்க மாநிலச் செயலாளர் ஜெ.வெங்கடேசன், நிர்வாகிகள் எஸ்.செங்குட்டுவன், ஏ.மகேந்திரமூர்த்தி, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், நிர்வாகி ஏ.பாரத், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி,பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.