அரசு போக்குவரத்து துறையில் ஏறத்தாழ 1000 ஊழியர்களின் 2020 முதல் சம்பள பிடிப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆம்ஆத்மி தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்ட அறிக்கை:
போக்குவரத்து துறையில் விருப்ப ஓய்வு பெற்ற 1000 போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள் குடும்பங்கள் – 2020 ஆம் ஆண்டு முதல் அவர்களின் (Terminal benefits) இறுதி பலன்கள், (EPF) இபிஎஃப், (Gratuity) பணி கொடை தொகை, (VRS) விருப்ப ஓய்வு இழப்பீடு மற்றும் பிற பலன்களைப் இது நாள் வரை அவர்கள் பெறவில்லை.
இதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஊழியர்களும் பரிதவிக்கும் அவர்களின் குடும்பத்தினரும் பல முறை போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டு பார்த்தும் அவர்களுக்கு முறையான பதில் ஏதும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இது குறித்து TNSTC யின் அதிகாரிகள் அவர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.
போக்குவரத்து துறையில் பணியாற்றியே ஊழியர்கள் கூடுதல் தொகை எதுவும் கேட்கவில்லை, PF, (Gratuity)சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிக்கொடை அல்லது (VRS) இழப்பீடு என போக்குவரத்து துறையில் தாங்கள் பணியாற்றிய போது அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தான் கேட்கிறார்கள் இதை வழங்குவதில் ஏன் தமிழக அரசு இவ்வளவு காலம் தாமதிக்க வேண்டும்.
2020 -ல் கோவிட்-19 காரணமாக உயிரிழந்த ஊழியர், அவரது உண்மையான (Terminal benefits) இறுதி பலன்களை கூட இது நாள் வரை துறை அதிகாரிகள் வழங்கவில்லை என்பது மிகவும் வருந்ததக்கது.
மேலும் பணி ஓய்வு செய்யப்பட்ட ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு போக்குவரத்துக் கழக அலுவலகங் களுக்குச் சென்று (Terminal Benefits) இறுதி பலன்களை வழங்கக் கோரி கேட்டு வருகின்றனர்.
இந்த பலன்களை கேட்டு தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குறித்து இதுவரை எந்த பதிலும் அரசு தரப்பிலிருந்து தரப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
இதற்கான நிதியை விடுவிக்க தமிழக அரசுக்கு குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் தவிக்கும் குடுபங்களுக்கு அரசு தரப்பிலிருந்து இது வரை எந்த பதிலும் இல்லை.
தமிழக முதல்வர் உடனடியாக இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து பரிதவிக்கும் இந்த குடும்பங்களுக்கு அவர்களின் சம்பள பிடித்தம் தொகை மற்றும் ஓய்வுதிய தொகையினை இனியும் தாமதிக்காமல் வழங்கிட ஆவண வேண்டும்
என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழக முதல்வரை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.