Close
நவம்பர் 22, 2024 12:43 காலை

வக்பு நிறுவனங்களின் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட உலமாக்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கு 20.04.2022  –க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

வக்பு வாரியத்தில் பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட அரசாணையின்படி  செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள உலமாக்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25,000 – (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச கல்வித் தகுதி தேவையில்லை.

மேற்படி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, வயதுச் சான்று, சாதிச் சான்று, புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.

ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்-விலைப்புள்ளி இணைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.

பயனாளிகள் இருசக்கர வாகனத்தினை தங்கள் சொந்த நிதி ஆதாரத்தின் பெயரிலோ அல்லது வங்கிக் கடன் மூலமோ வாங்கலாம். பயனாளி முழுத்தொகையும் செலுத்தி இருசக்கர வாகனம் வாங்கியிருப்பின் இதர தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கான மானியத் தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் முதல் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமாக்கள் 20.04.2022க்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top