புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் வரும் 31.03.2022 க்குள் இணைக்க வேண்டும் என.
மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டதகவல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,39,837 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ,2000- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 மூன்று தவணைகளாக ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 11-வது தவணைத் தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்த பின்னர் இந்திய தேசிய கட்டண நிறுவனம் (நேஷனல் பேமண்ட் கார்ப்ரேஷன் இந்தியா) மூலம் பயனாளிகளுக்கு ஏப்ரல் 2022 ஆம் வருட 11-வது தவணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவுரையின்படி ஆதார் எண்ணை விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளில் 23,737 விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
எனவே இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து இணைக்கப் படவில்லை எனில் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.