Close
நவம்பர் 22, 2024 5:43 காலை

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்து பார்வையிட்டார்

புதுக்கோட்டை

புதுகை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு (29.03.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 2021-2022 -ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 150 மாணவர்கள் பங்குபெற்று தங்களின் புதிய படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அறிவியல் கண்காட்சி நடத்துவதன் உயரியநோக்கம், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவித்தல், திறன்களை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், தலைமைப் பண்பு, குழுமனப்பான்மை, ஆரோக்கி யமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல், செய்துணர் கற்றலை வளப்படுத்துதல், ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குதற்கான வாய்ப்பு ஏற்படுத்துதல் போன்றவைகளாகும்.

அறிவியல் கண்காட்சியானது உணவு, பொருட்கள், நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ளவைகள், நகரும் பொருட்கள் மற்றும் மக்களும் எண்ணங்களும், பொருட்கள் எப்படி இயங்குகிறது , இயற்கை நிகழ்வுகள், இயற்கை வளங்கள் ஆகிய தலைப்புகளில் பள்ளி அளவில் நடைபெற்றது.

மேலும் பள்ளி அளவிலான கண்காட்சியில் ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த அறிவியல் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குபெறவுள்ளனர். அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்திய ஒவ்வொரு அறிவியல் மாதிரியையும் செய்யக் காரணம், செய்தவிதம், அதன் நோக்கம், பயன்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த 3 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 மதிப்புள்ள பொருள்கள் பரிசாக வழங்கப்படும்.

எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கண்காட்சியை  பார்வையிட்டு தாங்களும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் முனைவர் பெ.நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆ.மஞ்சுளா, முனைவர்.ஆ.ராஜாராமன், செ.மணிமொழி, உதவித்திட்ட அலுவலர் எஸ். தங்கமணி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுதந்திரன், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top