Close
செப்டம்பர் 20, 2024 7:43 காலை

 அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. வடு…

விமர்சனம்

கே.ஏ. குணசேகரனின் வடு

வடு.. மார்க்சீய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும்வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞ ரின் படைப்பு. பறையர் சாதியைச் சேர்ந்த சிறுவனாக வளர்ந்து,  கிறிஸ்துவ, இந்து, முஸ்லீம் சமூகங்களுக்கு மத்தியில்  கரு. அழ. குணசேகரனின்  “வடு”  தமிழ்நாட்டின் கிராமங்களில் நிலவும் வழமையான சாதிய ஒடுக்குமுறை பற்றி விவரிக்கிறது.

தாழ்ந்த சாதியினர் எவ்வாறு மூன்று மத சமூகங்களுடன் தங்களது வாழ்கையை நடத்தினார்கள் என்பதை, மேல் சாதியினரின் கடுமையான அநீதியான நடைமுறைகளால் எப்படிபாதிக்கப்பட்டார்கள் என்பதை தன் அனுபவத்தின் வாயிலாகவும், தானே அனுபவித்த வலிகள் மூலமாகவும் ஆழமாக வெளிப்படுத்துகிறார்.

இந்தியக் கிராமங்களில் சாதிய உணர்வும், கொடுமையும்
இரட்டிப்பாக உள்ளன என்பதை ஊர்ஜிதப்படுத்துவதோடு, தலித் விடுதலை என்பது அந்த சமூகத்திற்கான சிறந்த கல்வி யில் தான் தங்கியுள்ளது என்பதையும் இந்நூல் வலியுறுத்து கிறது.
ஒரு தென்னிந்திய கிராமத்தின் ஒருமுகமான அப்பாவித்தனத் தை, மறுமுகமான கொடூரத்தை தனது இயல்பு நடையில் மண் சார்ந்த பேச்சு நடையில் எழுதியிருக்கிறார். தமிழில் முதல் நவீன தலித் சுயசரிதையாகக் கருதப்படும் படைப்பான வடு, தலித் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் முக்கியமான புத்தகம்.

இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளால் எழுதப்படும் சுயசரிதைகள் அனைத்தையும் அம்பேத்கரின் அல்லது
இரட்டை மலை சீனிவாசனின் எழுத்துகளுக்கு நிகராக வகைப் படுத்த முடியாது. இருப்பினும்,  அனைத்து தலித் சுயசரிதைகளிலும் மேற்கண்ட இரண்டு முன்னோடி படைப்புகளில் காணப்படும் சில கூறுகளைக் காணலாம். தலித் சுய சரிதைகளில் தீண்டாமையின் மனிதாபிமானமற்ற அம்சங்களை அப்பட்டமாக சொல்வதன் மூலம், தீண்டா மைக்கு எதிரான சித்தாந்தத்தை வளர்க்க அவை உதவுகின் றன என்று கூறலாம்.
இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் 1939 -இல் வெளிவந்தாலும், தமிழில் வேறு எந்த தலித் சுயசரிதை யும் அதைதொடர்ந்து வந்ததாகதெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் பல தலித் இலக்கியப் படைப்புகள் வெளி வந்தாலும்,சுயசரிதை எழுத்துக்கள் இல்லை.அந்த குறையை ஆசிரியர் கே.ஏ.ஜி போக்கி இருக்கிறார்.

இந்த சுயசரிதையில் கொண்டுவரப்பட்ட மற்றொருமுக்கிய அம்சம் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் சகோதரத்துவம். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தோழர்களுடன் எழுத்தாளருக்கு இருந்த நெருக்கம் பற்றி,அங்கிருந்து தான் கற்றுக்கொண்ட மனிதனுடனான மனிதனின்தொடர்பு மற்றும் மனிதநேயம்தழுவியதன் அன்பு – இவைஇரண்டின் தூய அனுபவத்தை அப்படியே தன் படைப்பில் வைக்கிறார்.

சுயசரிதை என்பது ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட அடையாளத்தின் முழுமையை விளக்குவதே அதன் முதன்மை யான நோக்கமாகும். அது அவர்களுடைய உள்ளுணர்வை ஓரளவிற்கு வெளிக்கொணர்ந்து, அந்த தனி நபரின் மகத்துவத்தை, அனுபவத்தை மட்டுமே பெரும்பாலும் ஆராய்கிறது.

இந்த சூத்திரத்திற்கு உட்பட்டு நன்கு அறியப்பட்ட இந்தியர் களால்எழுதப்பட்ட பிறசுயசரிதைகளிலிருந்து, இந்தியதலித் சுயசரிதைகள் முற்றிலும்வேறுபட்டவை. அவை ஒருசமுதாயத் தின் அடித்தட்டு மக்களின்உணர்ச்சிகளை அவர்களின் போராட்டங்களை முன்வைப்பதாக இருக்கும்.
கே.ஏ. குணசேகரனின் .. வடு, இந்தப் பின்னணியில் வெளிவருகிறது.
இது அவரது அனுபவங்களின் பதிவு மட்டுமல்ல, ஒரு குறிப் பிட்ட காலத்திற்கான ஆவணமாகவும்உள்ளது. பெற்றோர்கள் தன்னை படிக்க வைக்க பட்ட கஷ்டங்களை விவரிக்கிறார். திரையரங்குகளில் சீட்டு கொடுப்பது, விறகு வெட்டுவது, புல் வெட்டுவது போன்ற வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழலைச் சொல்கிற போதும், காலை உணவாக ஊறவைத்த புளியங்கொட்டை சாப்பிட்டு அவரும் அவருடைய உடன்பிறந்தவர்களும் எப்படி பசியை அடக்கி னார்கள் என்பதை வாசிக்கிற போதும், குணசேகரனின் மொழி நம் இதயத்தின் ஆழத்தைத் தொடுகிறது.

இருவர் திருமணம் செய்து மாட்டு வண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்து தான் தமதுதெருக்களில் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும்ஆதிக்க சாதியினரைபார்க்கும்போது நாம் எந்தநூற்றாண் டில் வசித்துக் கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க வேண்டி யிருக்கின்றது. ஆதிக்க சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட, வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து பகடிசெய்வதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

இப்படியாக இந்த வடு.., மனிதநேயத்தை விட்டு வெளியேறும் ஒரு சில சமூகத்தின் கோரமுகங்களை வாசகர்கள் மத்தியில் வரைந்து காட்டுகிறது, ஒவ்வொரு தலித் உள்ளத்திலும் இருந்த
ஆழமான காயங்களை, ஆறாத ரணங்களை, சார்பு நிலை மற்றும்சாதிய மனநிலை இல்லாமல் நம் முன்னே கொண்டு வந்துநிறுத்துகிறது.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப் போன்ற பலர் அனுபவித்து உணர முடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

விமர்சகர்: சண்.சங்கர்-லண்டன்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top