அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பின் சார்பில் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300/- அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்டி இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் மூன்றாம் நபர் ஒப்பந்தம் செய்து இத்திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு வழங்கியுள்ளது.
இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை பெறுவதில் மிகப்பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நிறுவன அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதில்லை. எனவே அரசாணைக்கு முரண்பாடாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் வழங்குவதில்லை. மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25% முதல் 50% வரை மட்டும் வழங்குவது என்ற நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது.
கடந்த வாரம் சிவகங்கை மாவட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆசிரியருக்கு செலவு தொகையான 8 லட்சம் வழங்காமல் சொற்ப தொகையை மட்டுமே அனுமதித்ததால் மீதி தொகையை ஆசிரியையிடம் மருத்துவமனை நிர்வாகம் மிரட்டி பெற்றுக்கொண்டது. இது குறித்து இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இது போன்ற சூழலில் காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதிப் பணத்தை நோயாளிகளைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் மருத்துவமனை நிர்வாகங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
மேற்கண்ட பிரச்னைகளை காப்பீட்டு நிறுவனங்களின் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் கொண்டு சென்றால் அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. மேலும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடமே பேசிக் கொள்ளுங்கள் என அரசாணைக்கு புறம்பாக பதில் அளிக்கிறார்கள். இதனால் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக அரசின் உன்னதமான திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.