Close
நவம்பர் 24, 2024 10:13 மணி

அலமாரியிலிருந்து புத்தகம்…எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும்..,

அலமாரியிலிருந்து புத்தகம்

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும்.., புத்தக விமர்சனம்

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய  கிழவனும் கடலும்.. 

1954 -இல் கிழவனும் கடலும் நாவலுக்காகவே ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வருடம் முன்பு சிறந்த புனைவுக்கான புலிட்ஷர் விருதும் அளிக்கப்பட்டது.

இலக்கியத்திற்கான உயரிய விருது பெற்ற நாவல் என்கிற போது அதற்கே உரிய பூடகமான நடையும், எளிதில் விளங்காத விவரிப்புகளும் இருக்கும் என நினைக்கலாம். ஆனால் இந்த நாவல்  அப்படியல்ல.

நூறு பக்கங்களுக்கும் குறைவான பக்கங்களை கொண்ட இந்தபுனைக்கதையை புதினம் என சொல்லமுடியாவிட்டாலும் நாவலுக்குரிய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டிருக் கிறது. வேண்டுமானால் இதை சற்று விரிவாக எழுதப்பட்ட சிறுகதை எனலாம்.

மிக எளிமையான கதை. சாண்டியாகோ என்னும் மீனவக் கிழவன், 84 நாட்களாக கடலுக்குச் சென்று மீன்கள் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில், தன்னந்தனியனாக கடலில் மிக தூரம் உள்ளே சென்று, மிகப் பெரிய மீன் ஒன்றைப் பிடித்துவிடுகிறான்.

ஆனால் அதை முழுதாகக் கரைக்குக் கொண்டுவர முடியவில்லை. சுறாக்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி, தான் பிடித்த பிரம்மாண்டமான மீனின் எலும்புக்கூட்டோடு கரை திரும்புகிறான். பிடித்த மீன் கரை சேரவில்லை என்றாலும், அவனது அதிசாகசம் கரையிலுள்ள மீனவக் குடிகளுக்குத் தெரிந்து பிரமிக்கிறார்கள்.

வாழ்க்கையில் சிலர் வெகு சிரமத்துடன் சம்பாதிப்பதை, வேறு சில பலசாலிகள் எப்படிச் சுலபமாகத் தட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள் என்பதை இந்த சாண்டியோகோவின் மீனையும், அது சுறாக்களுக்கு எப்படி விருந்தாகியதும் என்பதையும் வைத்து நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

ஒரு கிழவன், அதுவும் தனியொருவனாக பெரிய மீனைப் பிடித்து, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அதன் எலும்புக் கூட்டையாவது கரைக்கு சேர்த்துவிடுகிற சாகசத்தின் மூலம் வீரம் என்றால் என்ன என்பதும் உண்மையான ஆண்மைக்கு இலக்கணம் என்ன என்பதும் மிக அழகாக சொல்லப்பட்டுள் ளது.

வாழ்க்கையின் சுவாரசியங்கள், வெற்றி தோல்விகளை எதிர் கொள்ளும் விதம், எது நட்பு எது பகை, புறப்பகை, அகப்பகை, விடா முயற்சி, ஆண்மை என்றால் என்ன போன்றவற்றை ரசிக்கும் படி எழுதி இருக்கிறார் ஹெமிங்வே.

சாலைக்கு அப்பால் தன் குடிசையில் கிழவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். கிழவனின் கனவில் சிங்கங்கள் வந்துகொண்டிருந்தன..என கதை முடிகிறது.

சிறிய புதினம் என்ற வகையை சேர்ந்த இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம், புத்தக அலமாரியை கூடுதலாக அலங்கரிக்கும் புத்தகமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்திலிருந்து.. சண்.சங்கர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top