Close
நவம்பர் 21, 2024 8:03 மணி

திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ வாழ்த்து

மதிமுக

மதிமுக பொதுச்செயலர் வைகோ

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட  வாழ்த்துச்செய்தி: ‘நீட்’ தேர்வினைக் கைவிட வலியுறுத்தியும், தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் அமைந்துள்ள புதிய குலக்கல்விக் கொள்கையின் கேடுகளை விளக்கியும், ஒன்றிய அரசு பறித்து வைத்துள்ள மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில்,   03.04.2022 இல் நாகர்கோவிலில் தொடங்கி, 25.04.2022 இல் சென்னையில் நிறைவு அடைய உள்ள விழிப்புணர்வு பிரசாரப் பெரும்பயணம் நடைபெற உள்ளது கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டு முறை கொரோனா தொற்றுக்கு ஆளாகி, உடல்நலம் குன்றிய நிலையையும் புறந்தள்ளிவிட்டு, 21 நாட்கள் பயணித்து 41 கூட்டங்களில் மக்களைச் சந்தித்து, திராவிட இயக்க இலட்சியங்களைப் பரப்பிடும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில்  தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் விழிப்புணர்வை உருவாக்க உள்ள இந்த இலட்சியப் பயணம், அனைத்திந்திய அளவிலும் ஓர் தாக்கத்தை உருவாக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை!

நீட் தேர்வுக்கு, 20க்கும் மேற்பட்ட இளம் தளிர்களை நாம் பலி தந்துவிட்டோம். இதன் பாதிப்பில் நம் இளைஞர்கள் இன்னமும் கண்ணீர் சிந்திடும் அவலம் தொடர்கிறது. இதற்குத் தீர்வு காண வேண்டிய மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றையும், ஒன்றிய அரசு திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் நம் இலட்சிய முழக்கம் நடைமுறையில் இல்லவே இல்லை.

இவைகளுக்கெல்லாம் தீர்வுகாண மக்களைத் தயார்படுத்தும் இந்தப் பிரச்சாரப் பயணம் முழுமையான வெற்றி பெறட்டும். தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களுக்கும், அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ள தோழர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவிப்பதாக  வைகோ  குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top